கழுத்தை நெரித்து கட்டிட தொழிலாளி கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கழுத்தை நெரித்து கட்டிட தொழிலாளி கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Sept 2018 4:00 AM IST (Updated: 20 Sept 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் முன் விரோதத்தில் கழுத்தை நெரித்து கட்டிட தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா நியூடவுன் அருகே வீரசாகர் பகுதியில் வசித்து வந்தவர் சகாயராஜ்(வயது 30), கட்டிட தொழிலாளி், நேற்று முன்தினம் இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் நண்பர்களை பார்க்க செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சகாயராஜ் வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால் நள்ளிரவு வரை அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

சகாயராஜை, அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலையில் வீரசாகர் பகுதி அருகே உள்ள முட்புதரில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் எலகங்கா நியூடவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எலகங்கா நியூடவுன் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் காணாமல் போனதாக தேடப்பட்ட கட்டிட தொழிலாளியான சகாயராஜ் என்று தெரியவந்தது. அவரை மர்மநபர்கள் வேறு இடத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை வீரசாகர் பகுதியில் உள்ள முட்புதரில் வீசிச்சென்றது தெரிந்தது. மேலும் சகாயராஜை, அவருக்கு தெரிந்தவர்களே முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சகாயராஜின் உடல் எலகங்கா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எலகங்கா நியூடவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story