கூட்டணி ஆட்சியை 5 ஆண்டுகள் நடத்துவேன்: எனக்கு அரசியல் நெருக்கடி இல்லை - குமாரசாமி


கூட்டணி ஆட்சியை 5 ஆண்டுகள் நடத்துவேன்: எனக்கு அரசியல் நெருக்கடி இல்லை - குமாரசாமி
x
தினத்தந்தி 20 Sept 2018 5:00 AM IST (Updated: 20 Sept 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

தற்போது எனக்கு அரசியல் நெருக்கடி இல்லை என்றும், கூட்டணி ஆட்சியை 5 ஆண்டுகள் நடத்துவேன் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

பாரத சாரண-சாரணியர் மற்றும் வழிகாட்டு 100-வது குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

எனக்கு உடல்நிலை சரி இல்லாத நிலையிலும், பி.ஜி.ஆர்.சிந்தியாவின் அன்பு கட்டளையை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன். தற்போது எனக்கு அரசியல் நெருக்கடி எதுவும் இல்லை. இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சிலர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டணி ஆட்சியை 5 ஆண்டுகள் நடத்துவேன். இதுபற்றி யாருக்கும் ஆதங்கம் வேண்டாம். இந்த கூட்டணி ஆட்சி அமைந்த நாளில் இருந்து, இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள எனது நிலையை சற்று யோசித்து பாருங்கள்.

நான் செய்யும் நல்ல பணிகளுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியை நீங்கள்(ஊடகங்கள்) ஆதரிக்க வேண்டாம். காலை முதல் இரவு வரை ஜனதா தரிசனம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டறிந்தேன். இது சுலபமான விஷயம் அல்ல.

அரசியல் நெருக்கடியை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் பணியாற்றி வருகிறேன். நான் அதிகாரிகளை கவுரவத்துடன் நடத்துகிறேன். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கருதி சரியாக செயல்படாமல் இருக்கும் அதிகாரிகளுக்கு ஒரு வாரம் காலஅவகாசம் கொடுக்கிறேன். அவர்கள் தங்களின் பணிகளை சரிவர செய்ய வேண்டும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story