கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதம்


கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதம்
x
தினத்தந்தி 19 Sep 2018 10:30 PM GMT (Updated: 19 Sep 2018 9:16 PM GMT)

கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதம் அடைந்தது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. அவை, விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி பகுதியில் கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு வருகிறது. அவை, இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது. பார்வுட், சூண்டி, காந்திநகர் பகுதியில் கடைகளை உடைத்து அங்கு வைத்திருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர். ஆனாலும் வனத்துறையினர் ஒருபுறம் விரட்டினாலும் மற்றொரு பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு லாரஸ்டன் கிராமத்துக்குள் 10 காட்டு யானைகள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் அந்த வீடுகளுக்குள் இருந்தவர்கள் அச்சம் அடைந்து உள்ளே பதுங்கி கொண்டனர்.

இதில் சில காட்டு யானைகள், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சந்தனதேவன் என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தின. பின்னர் வீட்டுக்குள் இருந்த பொருட்களை காட்டு யானைகள் உடைத்து நாசம் செய்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காட்டு யானைகள் விடிய விடிய அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்தன. அவை, நேற்று அதிகாலையில் வனத்துக்குள் சென்றன. பின்னர் வீடுகளை விட்டு வெளியே வந்த கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஓவேலி வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

வீடு சேதம் அடைந்தது குறித்து கூடலூர் தாசில்தார் மற்றும் வனத்துறையினரிடம் சந்தனதேவன் மற்றும் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். அதில், காட்டு யானைகள் வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது. எனவே ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் தடுக்க வேண்டும். சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மனுக்களை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story