மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு


மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 20 Sept 2018 4:45 AM IST (Updated: 20 Sept 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ– மாணவிகள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கோவை,

கல்லூரிகளில் செயல்படும் யுவா அமைப்பில் உள்ள மாணவ– மாணவிகளுக்கு ‘தடையேதும் இல்லை’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் நேற்று நடந்தது. இந்திய பெண்கள் கூட்டமைப்பின் தமிழக துணை தலைவர் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, நிர்வாகி ஆதித்யா, கோவை யங் இந்தியன்ஸ் தலைவர் திபேந்தர்சிங், துணைத்தலைவர் அனுஷ் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவ–மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மாணவர்களும், புதிய மாற்றத்தை விரும்பும் கூட்டமும், ஒன்று சேரக்கூடாது என்றும், ஒன்று சேர்ந்தால் தங்கள் வர்த்தகத்துக்கு இடையூறு ஏற்பட்டுவிடும் என்றும் அரசு அஞ்சுகிறது. அதனால், அரசு பலத்தை கையில் எடுத்துக்கொண்டு காகித அம்புகளை நம் மீது வீசுகிறது.

அந்த காகித அம்புகளின் முனை முறிய தொடங்கி விட்டது. தடைகளை வென்று சரித்திரம் படைப்போம். நம்மை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. சில கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என்று அறிவித்து உள்ளனர். கல்லூரியில் படிக்கும்போது அரசியலையே பாடமாக எடுத்துக்கொண்டு படிக்கிறார்கள். பின்னர் ஏன் அங்கு அரசியல் பேச உரிமை இல்லை?.

நீங்கள் ஏன் அரசியல் பேச வேண்டும் என்பதை இங்கே கூறுகிறேன். உங்கள் வாழ்க்கையில் வெகுவாக பாதிக்கக்கூடியது அரசியல். அது என்ன என்று புரிந்து கொள்ள உங்களுக்குள் அரசியல் பேச வேண்டும். எது நல்ல அரசியல் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதை யாரும் உங்களுக்கு உணர்த்தக்கூடாது.

நீங்கள் யாருக்கு வேண்டும் என்றாலும் ஓட்டு போடுங்கள். ஆனால் வாருங்கள் களத்துக்கு. அந்த களத்துக்கு வரும்போது உங்கள் ஓட்டுக்கு அருகதையானவர்களாக நாங்கள் தயாராக நிற்போம். அதை உணர்ந்து நீங்கள் செய்தால் போதும். ஆனால் நாட்டுக்கு செய்ய வேண்டிய மிக முக்கிய கடமை ஓட்டுரிமை. அதை செய்ய வேண்டும்.

ஏன் இப்படி குமுறுகிறேன் என்றால் உங்கள் வயதில் நான் அரசியலுக்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களை வந்து விடுங்கள் என்று வற்புறுத்துவதற்கான காரணம், என்னுடைய இந்த வயதில் நான் புலம்புவதுபோன்று, என் வயதுக்கு நீங்கள் வரும்போது புலம்பக்கூடாது என்பதற்காகதான்.

இப்படியாகிவிட்டதே தமிழகம் என்று உண்மையை சொல்லக்கூடிய தேவை வந்து இருக்காது. நாட்டிலேயே முதல் இடத்தை பிடிக்கக்கூடிய நாம், 20 ஆண்டுகளாக அதை கோட்டைவிட்டுவிட்டோமோ என்று எனக்கு எண்ண தோன்றுகிறது. இனி பொறுத்துக்கொள்ள நேரம் இல்லை. எனவே மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் அரசியலுக்கு திரண்டு வாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவ– மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி: வேலைகளை பெறுவது எப்படி?

பதில்: அரசு வேலை குறைந்து வருகிறது. தனியார் வேலை நிறுவனங்கள், சிறு தொழில்கள் பெருகி வருகின்றன. இது வேலைக்காரர்கள் உலகமாக இல்லாமல், முதலாளிகளின் உலகமாக மாறப்போகிறது. நீங்கள் வேலையை தேடக்கூடாது. தொழிலை தேடுங்கள். உங்களால் பலருக்கு வேலை கொடுக்க முடியும்.

கேள்வி: மக்கள் நீதி மய்யம் கட்சி மாணவர்கள் அரசியலுக்கு வர உதவியாக இருக்குமா?

பதில்: இளைஞர்கள்தான் இந்த அரசியலை மாற்ற முடியும். அதற்கு நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். எல்லா வரவேற்பும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருக்கிறது. தாராளமாக வாருங்கள். அரசியலுக்கும், நாட்டுக்கும் இளைஞர்கள்தான் எதிர்காலம். எனக்கு பிடித்த அவதாரம் குறித்து கேட்டார்கள். சினிமாவில் நான் பல அவதாரங்களை எடுத்து நடித்து உள்ளேன். ஆனால் நான் நானாக உங்களுடன் கலந்து இருப்பது இந்த அவதாரத்தில்தான்.

கேள்வி: தற்போது அரசியலில் ஊழல் அதிகமாக இருக்கிறது. ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவது எப்படி?

பதில்: நீங்கள் முதலில் லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். ஓட்டுப்போட யாரும் பணம் கொடுத்தாலும் வாங்கக்கூடாது. நீங்கள் திருந்திவிட்டால் உங்களை பார்த்து பலர் திருந்துவார்கள். அப்போது அரசியலில் லஞ்சம், ஊழல் இருக்காது.

கேள்வி: நீங்கள் எந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?.

பதில்: விவசாயத்துக்கும், கல்விக்கும்தான். விவசாய நிலத்தின் கீழ் வைரமும், தங்கமும் இருந்தால் கூட அதை விட்டுவிட வேண்டும். விவசாயம்தான் முக்கியம். பஞ்சகாலத்தில் நிலத்தில் விளையும் உணவு பொருட்களை சாப்பிட முடியும். ஆனால் நிலத்துக்கு கீழ் இருக்கும் வைரத்தை சாப்பிட முடியாது.

விவசாயம் தோல்வி அடைந்த பின்னர் நிலத்தின் கீழ் இருக்கும் வைரத்தையும், தங்கத்தையும் வெட்டி எடுக்கலாம். விவசாயம் ஏற்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அது உயரத்தில் இல்லை. உயரத்தில் வைக்க வேண்டும் என்ற கனவு என்னைப்போன்றவர்களுக்கு இருக்கிறது. அதை பலர் தடுக்கிறார்கள். அதை நாம் மாற்ற வேண்டும்.

கேள்வி: மற்ற நாடுகளில் தாய்மொழியில் கல்வி கற்பதை உணர்ந்து உள்ளனர். அதுபோன்று நமது தாய் மொழியில் கல்வி கற்பதை கொண்டு வர முடியுமா?

பதில்: தமிழ் மொழியில் கல்வி கற்பது சாத்தியம். தமிழ் இனி மெல்ல வாழும். ஆனால் ஆங்கிலம் கற்க வேண்டியது கட்டாயம். வேறு மொழிகள் கற்பதில் தவறும் இல்லை. கடல் கடந்து செல்வதற்கு எந்த மொழி நமக்கு தேவை என்றாலும் அந்த மொழியை கற்க வேண்டும். ஆங்கிலத்தை கேலி செய்யக்கூடாது. அதையும் கற்க வேண்டும்.

கேள்வி: 6 மாதத்துக்கு ஒரு புதிய கட்சி வருகிறது. ஓட்டுதான் போட முடிகிறது. நாங்கள் அரசியலில் பங்கெடுப்பது குறித்த தெளிவு இல்லை. அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: உங்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கி தெளிய வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு பலர் தடை கற்களை வைத்து உள்ளனர். எங்கு வர வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள், நான் அங்கு வருகிறேன். குறிப்பாக மாணவர்கள் ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அதை செய்ய தொடங்கினால் கண்டிப்பாக அதிர்வலை ஏற்படும். அது நாடெங்கும் பறக்கும்.

கேள்வி: நீங்கள் அரசியலுக்கு வந்தது எப்படி?

பதில்: எனது வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தது. விஸ்வரூபம் படத்தில் சொத்துக்களை ஜப்தி செய்ய சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. 3 வீடுகளின் பத்திரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் யாருக்கும் கடன் வைக்கவில்லை. அந்த 3 வீடுகளும் எனக்கு சொந்தமானது. அங்கு நான் எப்போது வேண்டும் என்றாலும் செல்லலாம்.

இதில் பலர் எனக்கு உதவி செய்தனர். இப்படிப்பட்ட அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும் என்று யோசித்தபோது எனக்கு இந்த வழிதான் தெரிந்தது. அதனால்தான் நான் இந்த வழியை தேர்வு செய்து அரசியலுக்கு வந்தேன்.

கேள்வி: பெண்கள், குழந்தைகள் பாலியல் கொடுமையை தடுப்பது எப்படி?

பதில்: இது தொடர்பாக நாங்கள் பல செயல்களை செய்து வருகிறோம். நாங்கள் செய்தது உலக அளவிலான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் பல தொழில் நுட்பங்கள் அடங்கிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பெண்களும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் அளவுக்கு சிறிய கருவியாக இருக்கிறது. அது குறித்து வெளிச்சம்போட்டு காட்டி வருகிறோம்.

இவ்வாறு கமல்ஹாசன் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


Next Story