வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே முட்டை விலை நிர்ணயம்: தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்


வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே முட்டை விலை நிர்ணயம்: தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Sept 2018 4:15 AM IST (Updated: 20 Sept 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே முட்டை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு சார்பில் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்கள் மட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த விலை மீதமுள்ள நாட்களுக்கும் பொருந்தும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைக்கான விலையை தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் ஆட்சேபனை தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சின்ராஜ் தலைமை தாங்கினார்.

இதில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒவ்வொரு வாரமும் பழைய முறைப்படி திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் சமீபத்தில் பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 60 முதல் 70 காசுகள் வரை குறைத்து கொடுத்ததை அனைவரும் அறிவார்கள். அதனால் பண்ணையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதை தவிர்க்கும் பொருட்டே நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முட்டைக்கான விலையை தினசரி நிர்ணயம் செய்வதன் மூலம் இனிவரும் காலங்களில் முட்டை வியாபாரமானது சுமுகமாக நடைபெறும். நாம் முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 25 காசுகளுக்கு மேல் குறைத்து கொடுக்காமல் இருந்தால், முட்டை விலையை அதிகரிக்கவும், சுமுகமாக வியாபாரம் நடத்தவும் முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story