தஞ்சை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் ரூ.113 கோடியில் தூர்வாரும் பணி


தஞ்சை மாவட்டத்தில்  7 ஒன்றியங்களில் ரூ.113 கோடியில் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 19 Sep 2018 9:30 PM GMT (Updated: 19 Sep 2018 10:31 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் ரூ.113 கோடியில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதனை விரைந்து முடிக்க, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வள, நிலவள திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-

நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பூதலூர், அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய 7 ஒன்றியங்களில் ரூ.113 கோடி அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அலுவலர்கள் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வேளாண்மைத்துறை மூலம் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள், வயல்வெளி பள்ளிகள், பூச்சி நோய் நிர்வாகம் குறித்த பயிற்சிகள், மண்புழு உரம் தயாரித்தல், விதை கிராம திட்டம், வேளாண் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நடப்பாண்டில் வேளாண் உற்பத்தியை பெருக்கிட வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.32.4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 78 பண்ணைக்குட்டைகளை விரைந்து முடித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொ) ஜஸ்டின், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தனபாலன், அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் செல்லமுத்து, வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முருகானந்தம், காவிரி கோட்ட உதவி செயற்பொறியாளர் மரியசூசை மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story