உடலில் மண்எண்ணெய் ஊற்றி கோர்ட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது


உடலில் மண்எண்ணெய் ஊற்றி கோர்ட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2018 10:37 PM GMT (Updated: 19 Sep 2018 10:37 PM GMT)

கோர்ட்டில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அறைக்கு வெளியே உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் கைது செய்தனர். பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

திருப்பத்தூர், 


திருப்பத்தூரில் உள்ள ஆதிசக்திநகரை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவர் பர்னீச்சர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவருக்கும், இவரது அத்தை ராஜம்மாள் மகள் ரமிளாவிற்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக திருப்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தது.

அப்போது சேகர் தனது மனைவி மீனாவுடன் கோர்ட்டிற்கு வந்தார். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கோர்ட்டு அறைக்கு வெளியே வளாக பகுதியில் நின்று கொண்டிருந்த சேகர் திடீரென தான் கையில் எடுத்து வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து, உடலில் மண்எண்ணெயை ஊற்றினார். அங்கிருந்தவர்கள் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

உடனடியாக நீதிபதி வேலரஸ், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சேகரை மீட்டு, பாதுகாப்பாக அழைத்து செல்லும்படி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து போலீசார் சேகரை மீட்டு, வெளியே அழைத்து வந்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் விசாரணையில், “வழக்கின் தீர்ப்பு ரமிளாவுக்கு சாதகமாக போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்” என்றார்.

இது குறித்து கோர்ட்டு ஊழியர் பார்த்தீபன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக சேகரை கைது செய்தனர். 

Next Story