ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீதஞ்சேரி–வெங்கல் இடையே 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. ஊத்துக்கோட்டை– பெரியபாளையம் இடையே ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டால் போலீசார், வாகனங்களை சீதஞ்சேரி– வெங்கல் சாலையில் திருப்பி விடுவது வழக்கம்.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை அவ்வப்போது பெய்து வரும் மழையால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக கல்பட்டு முதல் வெங்கல் வரையிலான சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கல்பட்டுவில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் சாலையில் சுமார் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதில் சிக்கி கொள்கின்றன. இதனால் அந்த மார்க்கத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதர வாகனங்களில் செல்வோர் அவதிபட்டு வருகின்றனர். இதுகுறித்து கல்பட்டு மற்றும் அருகே உள்ள ஏனம்பாக்கம், மாலந்தூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சீதஞ்சேரி–வெங்கல் இடையே உள்ள சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சீதஞ்சேரி, வெங்கல் மார்க்கத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. ஆகையால் இந்த மார்க்கத்தில் சாலை சீரமைக்கும் போதெல்லாம் வனத்துறை அதிகாரிகள் எங்கள் அனுமதி இல்லாமல் சாலை சீரமைக்கவோ, அகலப்படுத்தவோ கூடாது என்று தடை போடுவதாக கூறப்படுகிறது.
இந்த காரணத்தால் குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவதில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சாலையை உடனே சீரமைக்க நடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.