முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று நம்புகிறேன் எஸ்.பி.சண்முகநாதன் பேட்டி
சிறப்பாக ஆட்சி நடத்தும் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று எஸ்.பி.சண்முகநாதன் கூறினார்.
தூத்துக்குடி,
சிறப்பாக ஆட்சி நடத்தும் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறினார்.
இது குறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
சிறந்த ஆட்சிமுன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் சிறந்த ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. முன்பு வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவிப்பார். தற்போது, பொறுப்பில் உள்ளவர்கள் பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இருந்தால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கட்சி தலைமை அறிவித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் தலைகீழாக உள்ளது.
தேர்தல்மேலூர் கூட்டுறவு வங்கி தலைவராக முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை போட்டியிடுகிறார். அவரை வரவிடக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க.வினரே வேட்பாளர்களை அறிவித்தனர்.
தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இதில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 6 பதவிக்கு 15 பேர் போட்டியிட்டனர். இதில் ஏசாதுரை ஆதரவாக போட்டியிட்ட 6 பேர் வெற்றி பெற்றனர். பொறுப்பில் உள்ளவர்கள் கடுமையாக போராடி ஆதரித்தவர்கள் தோற்று உள்ளனர். இதனால் பணம், அதிகாரம் இருப்பதால் வெற்றி பெற்ற சிலரை அழைத்து சென்று விட்டனர். ஒரு அ.தி.மு.க.காரரை தோற்கடிக்க போராடுகின்றனர். சிலர் கட்சியை அழித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சியில் இருக்கும் கவனத்தை கட்சியில் செலுத்தவில்லை. ஏற்கனவே கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் கட்சி அழிந்து விட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தை அழிக்க பார்க்கிறார்கள்.
வழிநடத்துவார்கள்நான் 1972–ல் இருந்து அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் கட்சி இருக்கும் என்று கூறினார். இந்த கட்சிக்காக நான் எப்போதும் உழைக்க தயாராக இருக்கிறேன். வேறு எந்த சந்தேகத்துக்கும் இடம் கிடையாது. ஆனால் கட்சியை அழிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள்தான் தற்போது கட்சியில் உள்ளனர்.
மேலூர் கூட்டுறவு வங்கியில் நடந்தது போன்று, மாவட்டத்தில் எந்த இடத்தில் அ.தி.மு.க. போட்டியிட்டாலும், பொறுப்பில் உள்ளவர்கள் சிபாரிசு செய்பவர்களை தூத்துக்குடி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது தான் தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும். ஆட்சியை சிறப்பாக நடத்தும் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று நம்புகிறேன்.
அ.தி.மு.க.வில் இருப்பேன்இந்த பிரச்சினை பற்றி நான் இதுவரை கட்சி தலைமைக்கு எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் கட்சியை 3 பேரும் அழித்துக் கொண்டு இருப்பதால், மேலூர் கூட்டுறவு சங்க தேர்தலில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு அ.தி.மு.க.வில்தான் இருப்பேன். உண்மையான அ.தி.மு.க.வினருக்கு துணையாக இருப்பேன். அ.தி.மு.க. தொண்டர்கள் மனதளவில் இணைந்து விட்டனர். அ.தி.மு.க.வில் ஊழல் நடப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டால் அது தி.மு.க. ஆட்சிதான். கருணாநிதி ஒரு தீயசக்தி என்று எம்.ஜி.ஆர். கூறினார். அப்படிப்பட்ட தி.மு.க.வுடன்தான் டி.டி.வி.தினகரன் சேர்ந்து உள்ளார். அமைச்சர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்படுகிறது. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், அ.தி.மு.க.வை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற சோதனைகள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.