தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஒருநபர் ஆணையம் பரிந்துரை


தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஒருநபர் ஆணையம் பரிந்துரை
x
தினத்தந்தி 21 Sept 2018 2:30 AM IST (Updated: 20 Sept 2018 7:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஒருநபர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஒருநபர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 24 பேர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

33 பேருக்கு சம்மன்

கடந்த 17–ந் தேதி முதல் 4–வது கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள முகாம் அலுவலகத்தில், விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் விசாரணை நடத்தினார். இதற்காக மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 4 நாட்களிலும் மொத்தம் 25 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த 4–ம் கட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை மொத்தம் 49 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்து உள்ளனர்.

பரிந்துரை

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தூத்துக்குடி மேலத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் வீரபாகு என்ற சுந்தர்(வயது 17) என்ற சிறுவனும் ஆணையம் முன்பு விசாரணைக்காக ஆஜர் ஆனார். அப்போது, அவர் கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அந்த சிறுவனுக்கு மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார்.

இது குறித்து ஆணைய வக்கீல் அருள்வடிவேல் என்ற சேகர் கூறியதாவது:–

49 சாட்சிகளிடம் விசாரணை

ஒருநபர் விசாரணை ஆணையம் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதற்காக விரிவாக விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை 49 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. இதில் காயம் அடைந்த 39 பேரிடமும், இறந்தவர்களின் குடும்பத்தினர் 8 பேரிடமும் விசாரணை நடந்து உள்ளது. கூடுதல் நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இன்னும் அடுத்தகட்ட விசாரணைக்கு வர வேண்டியவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மக்கள் விரும்பி, தைரியமாக வந்து வாக்குமூலம் அளித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், சம்மன் அனுப்பப்படவில்லை என்றாலும், தானாக வந்து ஆணையம் முன்பு ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம். ஆணையத்தில் விசாரணை விரைவாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் 22–ந் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணை நடக்கும் என்று கூறினார்.


Next Story