திருவள்ளூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்


திருவள்ளூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:30 PM GMT (Updated: 20 Sep 2018 6:59 PM GMT)

திருவள்ளூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர் திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வணிக வளாகத்துக்கு கலெக்டர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். அங்கிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் சி.வி. நாயுடு சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த உணவகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அங்குள்ள மளிகை கடை, காய்கறி கடை, பூக்கடை போன்றவற்றில் கலெக்டர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பிளாஸ்டிக் பொருட்களை அவர் பறிமுதல் செய்தார். இது குறித்து கலெக்டர் கூறுகையில்:-

தூய்மை திருவள்ளூர் மாவட்டமாக உருவாக்கும் நோக்கத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தொடரும் என்றார்.

Next Story