குடிநீர் தொட்டி ஆபரேட்டர் கொலை வழக்கு: 12 பேருக்கு ஆயுள் தண்டனை
குடிநீர் தொட்டி ஆபரேட்டர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடமூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் சம்பத்குமார் (வயது 42). இவர், குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் வடமூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்த ஹேமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
அதன்பிறகு அவரிடம் இருந்து விலகி, உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாபு என்பவருக்கு நெருக்கமாக இருந்து, செயல்பட்டார். இதனால் பாபுவுக்கும், ஹேமலதா தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 26.2.2013 அன்று சம்பத்குமார், தெரு வழியாக நடந்து வந்தார். இதை பார்த்த ஊராட்சி மன்ற தலைவி ஹேமலதா (45), அவருடைய கணவர் ராமசாமி (54), ராமானுஜம் மகன்கள் அருள்குமார் (38), சந்தோஷ்குமார் (32), ரத்தினசபாபதி மகன் சசிகுமார்(40), ரங்கநாதன் மகன் பாஸ்கர் (40), விவேகானந்தன்(55), சகஜானந்தம் (47), கலியமூர்த்தி மகன் பழனிசாமி (42), ராமதாஸ் மகன் மதன்மோகன் (31), ராஜ் மகன் அழகானந்தம் (45) மெய்யழகன் மகன் ராஜ்குமார் (32), மோகன் (59) பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் (40) ஆகிய 14 பேரும் அவரை வழிமறித்து தாக்கினர்.
இதில் உயிருக்கு பயந்து போன அவர் தனது வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதையடுத்து ஹேமலதா உள்பட 14 பேரும் சேர்ந்து சம்பத்குமார் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதில் வீட்டுக்குள் இருந்த சம்பத்குமார் தீக்காயங்களுடன் அலறி துடித்தபடி கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்.
அப்போது வெளியில் நின்ற அவர்கள் 14 பேரும் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.
இது பற்றி சம்பத்குமார் தரப்பை சேர்ந்த சுந்தரவல்லி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடந்து வந்தது. இதற்கிடையில் ராமசாமி, பாஸ்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஹேமலதா உள்பட 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.
முன்னதாக தீர்ப்பு பற்றி அறிந்ததும் 12 பேரின் குடும்பத்தினரும் சிதம்பரம் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் நீதிபதியின் தீர்ப்பை கேட்டதும் கதறி அழுதனர். பள்ளி சீருடைகளில் வந்த அவர்களின் குழந்தைகளும் அவர்களை பார்த்து அழுதனர். இதையடுத்து அவர்கள் 12 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் சிதம்பரம் கோர்ட்டு வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story