இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கைதானவர் ஜாமீனில் விடுதலை


இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கைதானவர் ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 8:16 PM GMT)

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான முபாரக் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கோவை,

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார், கோவை துடியலூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சதாம் உசேன், அபுதாகீர், சுபேர், முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்களில் சதாம் உசேன், அபுதாகீர் ஆகியோர் ஏற்கனவே நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுபேர், முபாரக் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

கைதான முபாரக் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. கைதானவர்கள் 90 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று வக்கீல் சண்முகவேலாயுதம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்டு இருந்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் விமலா, ராமதிலகம் ஆகியோர் இந்த மனுமீது விசாரணை நடத்தி, முபாரக்கை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையின்போது முபாரக் ஆஜராக வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முபாரக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

Next Story