வில்லியனூர் அருகே பயங்கரம்: கழுத்தை அறுத்து பெண் படுகொலை


வில்லியனூர் அருகே பயங்கரம்: கழுத்தை அறுத்து பெண் படுகொலை
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 8:42 PM GMT)

வில்லியனூர் அருகே சேலையால் கையை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர், 


புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் அரசூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (3) என்ற மகளும், ஜெய கணேஷ் (2) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கிருஷ்ணவேணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணவேணி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் அசோக் மற்றும் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் கரிக்கலாம்பாக்கம் பாகூர் சாலையில் உள்ள செங்கன்ஓடை பகுதியில் காளி கோவில் அருகே கிருஷ்ணவேணி பிணமாக கிடப்பதாக, கரிக்கலாம்பாக்கம் போலீசுக்கு நேற்று காலை அசோக் தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், பெரியசாமி ஆகியோர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த கிருஷ்ணவேணியின் உடலை பார்த்த போது அவரது இரு கைகளும் சேலையால் கட்டப்பட்டு இருந்தன. முன்கழுத்து அறுக்கப்பட்டு கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து புதுவையில் இருந்து மோப்ப நாய் அலெக்ஸ் வரவழைக்கப்பட்டது. அது, கொலை நடந்த இடத்தில் இருந்து பாகூர் சாலையில் சிறிது தூரம் ஓடி ஒரு கம்பெனி அருகே போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதன்பின் கிருஷ்ணவேணியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே ஒரு எலுமிச்சை பழம் மற்றும் சாக்கு பை ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது. எனவே அங்கு கிருஷ்ணவேணியுடன் யாரோ சென்று இருக்க வேண்டும். அங்கு அவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
மேலும் கிருஷ்ணவேணி அணிந்திருந்த தாலிச் சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவை மாயமாகி இருந்தது. எனவே அவரை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டனவா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள காளி கோவிலுக்கு கிருஷ்ணவேணி அடிக்கடி சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்றும் அவர் அந்த கோவிலுக்கு சென்று இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவர் தனியாக கோவிலுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்தொடர்ந்து சென்று கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலையாளியை பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் முதற்கட்டமாக கிருஷ்ணவேணியின் செல்போனில் பதிவாகியுள்ள தொலைபேசி அழைப்புகள் மூலம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து அவரது கணவர் அசோக் தான் முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவருக்கு கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடம் எப்படி தெரியும் என்பது போலீசுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசோக்கின் தாய், தங்கையிடமும் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். 

Next Story