ராஜீவ்காந்தி சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
ராஜீவ்காந்தி சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று மகளிர் காங்கிரசுக்கு புதிய கொடி அறிமுக விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. நிகழ்ச்சிக்கு மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கொடி, லோகோ ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர். அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., விஜயவேணி எம்.எல்.ஏ. ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகளிர் காங்கிரசுக்கு சக்தி என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளோம். மாநிலம் முழுவதும் பூத் வாரியாக மகளிர் சேர்க்கை நடைபெறும்.
அரும்பார்த்தபுரம் மேம்பால பணிகளுக்கு இடம் கையகப்படுத்தப்பட்டதில் இழப்பீடு போதாது என்று கூறி 9 பேர் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
இப்போது அந்த பகுதியில் தற்காலிகமாக ஒருவழிப்பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் 2 இடங்களில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ராஜீவ்காந்தி சிக்னலில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு வாய்மொழியாக ஒப்புதல் அளித்து உள்ளது. இந்திராகாந்தி சிக்னலில் மேம்பாலம் அமைக்க நெல்லித்தோப்பு பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யவேண்டியுள்ளது. அந்த பணிகள் முடிந்தவுடன் மேம்பாலம் அமைக்கப்படும்.
மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுதான் அரசு, ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கடமை. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
Related Tags :
Next Story