குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்பட்ட வைகை தண்ணீர் பெரிய கண்மாய் வந்தது
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று காலை பெரிய கண்மாயை வந்து சேர்ந்தது.
ராமநாதபுரம்,
மாவட்ட குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்தும் வகையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வைகை அணையிலிருந்து ராமநாத புரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய வைகை ஆறு பூர்வீக ஆயக்கட்டு பாசன பகுதிகள் கணக்கீட்டின்படி, 7 பங்கு அளவாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 909 கன அடியும், 3 பங்கு அளவாக சிவகங்கை மாவட்டத்திற்கு 390 கன அடியும், 2 பங்கு அளவாக மதுரை மாவட்டத்திற்கு 260 கன அடியும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மாவட்ட கணக்கில் இருந்து திறந்துவிடப்பட்டு வேகமாக சீறிப்பாய்ந்து வந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி பார்த்திபனூர் வந்து சேர்ந்தது. அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வைகை தண்ணீரை வரவேற்றனர். வைகை தண்ணீர் நேற்று காலை 9 மணிக்கு ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்து சேர்ந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த தண்ணீர் வருகையை அறிந்த பொதுமக்களும், விவசாயிகளும் அந்த பகுதிக்கு சென்று தண்ணீர் வருவதை ஆர்வமுடன் பார்த்து சென்றனர். வைகை வரத்து கால்வாய் பகுதிகளில் மணல் அள்ளியதால் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களையும் கடந்து இந்த தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன் கூறியதாவது:- வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் பெரியகண்மாயை வந்தடைந்துள்ளது. சீரான வேகத்தில் வருவதால் முழு தண்ணீரும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தண்ணீர் வருகையை வைத்து பார்க்கும் போது 7 அடி கொள்ளளவு கொண்ட பெரிய கண்மாயில் 3 அடி முதல் 4 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
முழுமையாக தண்ணீர் வந்து சேர்ந்த பின்னர் நீர்நிலைகளை நிரப்புவது குறித்து முடிவுசெய்யப்படும். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டைபோலவே தண்ணீரை வீணாக்காமல் நீர்நிலைகளை நிரப்புவதில் அக்கறை கொண்டுள்ளது. தண்ணீர் வரும் வழியில் யாரும் சட்டவிரோதமாக தண்ணீரை மோட்டார் வைத்து திருடிவிடாமல் இருக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டாலும் இந்த தண்ணீர் வரத்து இன்னும் 7 நாட்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story