நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2018 12:08 AM GMT (Updated: 21 Sep 2018 12:08 AM GMT)

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு மற்றும் அகவிலைப்படியுடன் கூடிய மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராஜேந்திரன், சின்னப்பையன், ஜெயராஜ், இணை செயலாளர்கள் பெருமாள், தமிழரசி, சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த போராட்டத்தை மாநில துணை தலைவர் பெரியசாமி தொடங்கி வைத்து பேசினார்.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், பொது சுகாதாரத்துறை சங்கத்தின் நிர்வாகி குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஒரு மாத ஊதியம் பொங்கல் போனசாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக நீட்டித்து வழங்க வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளர்களை முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நாமக்கல்லில் பரமத்திசாலை, கோட்டை சாலை வழியாக சென்று பூங்கா சாலையில் முடிவடைந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் சரோஜா நன்றி கூறினார். 

Next Story