கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார்; மாணவ- மாணவிகள் சாலை மறியல்


கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார்; மாணவ- மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:00 PM GMT (Updated: 21 Sep 2018 12:13 AM GMT)

கோவை அருகே தனியார் கல்லூரி தாளாளர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க கோரி மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, 

கோவையை அடுத்த சரணவம்பட்டி- துடியலூர் சாலையில் எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் தாளாளர் சுப்பிரமணியன் அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த பெண் ஊழியர் கல்லூரி அலுவலகத்துக்குள் வரும்போது, தாளாளர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்றும், அந்த பெண் ஊழியர் நழுவிச்செல்வது போலவும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

பாலியல் தொந்தரவு தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் ஊழியர் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளாளரை கண்டித்து எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று கல்லூரி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த கல்லூரிக்கு நேற்று மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கல்லூரியில் இருந்து வெளியே வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
இந்த நேரத்தில் கல்லூரியில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சொந்தமான 15 பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்தன. அந்த பஸ்களை மாணவ- மாணவிகள் சிறைபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு பஸ்களை விடுவித்து மாணவ- மாணவிகளை அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் போராட்டத்தின்போது கல்லூரி அலுவலகம் மீது கல்வீசப்பட்டது. இதில் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
இந்த சம்பவம் குறித்து பெண் ஊழியர் அளித்த புகாரில், ‘கல்லூரி தாளாளர் என்னிடம் ஆபாச வார்த்தைகள் கூறி தவறாக நடக்க முயன்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கடுமையாக எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

இந்த புகாரை துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் பெற்றுக் கொண்டு புகாருக்கான ரசீது(சி.எஸ்.ஆர்.) வழங்கியதுடன், இந்த புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, ‘வீடியோ காட்சிக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை. போலீஸ் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம்’ என்று தெரிவித்தனர். 

Next Story