மன்னார்குடியில், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது: 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மன்னார்குடியில் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி நிலக்கரி ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதன் காரணமாக 8 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுந்தரக்கோட்டை,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வழியாக கரூரை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
மன்னார்குடி ருக்மணிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் சாலையில் லாரி தலை குப்புற கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இதையடுத்து போலீசார் 2 கிரேன்களின் உதவியுடன் நேற்று காலை 8 மணி அளவில் லாரியை மீட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே அந்த சாலையில் வாகனங்களால் செல்ல முடிந்தது. நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் மன்னார்குடியில் நேற்று 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story