கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Sep 2018 1:55 AM GMT (Updated: 21 Sep 2018 1:55 AM GMT)

கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர்.

கறம்பக்குடி, 

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் ஊராட்சியில் அரியாண்டி, காஞ்சிராங்கொல்லை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 4 சிறுமின்விசை தொட்டிகள் உள்ளன. இந்நிலையில் நீர்மட்டம் குறைவு மற்றும் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 மாதமாக அந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காஞ்சிராங்கொல்லை பஸ் நிறுத்தம் அருகே கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அதிகாரி சதாசிவம் மற்றும் மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆழ்குழாய் கிணறுகளில் கூடுதல் குழாய்களை பொருத்தி சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் நேற்று 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இது தேர்வு நேரம் என்பதால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story