தமிழக அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை அமைச்சர் தங்கமணி பேட்டி


தமிழக அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2018 10:00 PM GMT (Updated: 21 Sep 2018 12:51 PM GMT)

தமிழக அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

தூத்துக்குடி, 

தமிழக அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

தூத்துக்குடியில் ஆய்வு

தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று காலை வந்தார். அவரை அனல் மின்நிலைய தலைமை என்ஜினீயர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர் தங்கமணி, அனல் மின்நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள நிலக்கரி மற்றும் கப்பலில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் அனல்மின் நிலையத்துக்கு கொண்டு வரக்கூடிய நிலக்கரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனல்மின்நிலைய வளாகத்தில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நிலக்கரி தட்டுப்பாடு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதால், பல்வேறு உற்பத்தி நிலையங்கள் தடைபட்டு இருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி இருப்பை பார்வையிடுவதற்கும், நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தற்போது 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மின்தேவை குறைந்து இருப்பதால், 5 மின் உற்பத்தி எந்திரங்களில் ஒரு எந்திரம் மட்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.

தவறான தகவல்

இன்று (நேற்று) காலையில் சூரியஒளி மின்சாரம் 1,400 மெகாவாட், நீர் மின்சாரம் 2 ஆயிரம் மெகாவாட், காற்றாலை மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்த நிலையில் அனல் மின்நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தேவை இல்லாத காரணத்தால், உற்பத்தி எந்திரங்களை நிறுத்தி வைத்து உள்ளோம். தேவைப்படும்போது முழு உற்பத்தியை தொடங்குவோம்.

5 மின் உற்பத்தி எந்திரங்களிலும் முழு உற்பத்தி நடந்தால் ஒரு நாளைக்கு 16 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். ஆகையால் தற்போது, 6 நாட்கள் வரை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. வருகிற 25–ந் தேதி மேலும் ஒரு நிலக்கரி கப்பல் வர உள்ளது. தமிழ்நாட்டில் எந்த அனல் மின்நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தவறான தகவல்களை எதிர்க்கட்சியினர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இறக்குமதி

வழக்கமாக 15 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு வைக்கப்படும். 15 நாட்களுக்கு முன்பு மழையின் காரணமாக நிலக்கரி வரத்து குறைந்ததால், கையிருப்பு குறைந்து விட்டது. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இதே நிலை நீடித்தது. சில மாநிலங்களில் உள்ள அனல்மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பே இல்லாத நிலைகூட உள்ளது. இதனால் நிலக்கரி கையிருப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக முதல்–அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக நான் டெல்லி சென்று மத்திய மந்திரியை சந்தித்தோம்.

கடந்த 3 நாட்களாக நாங்கள் கேட்ட நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது. வடசென்னை, மேட்டூரிலும் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. அக்டோபர் மாதம் 2–வது வாரத்தில் இந்த நிலக்கரி வந்து சேரும்.

மின்வெட்டு

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு எதுவும் இல்லை. கடந்த 9, 10–ந் தேதிகளில் அரைமணி நேரம் மின்வெட்டு இருந்தது. காற்றாலை மின்சாரம் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை இருக்கும். காற்றாலை மின்சாரம் இருக்கும்போது, மத்திய தொகுப்பு, மாநில தொகுப்பில் உள்ள அனல் மின்நிலையங்கள் பராமரிப்புக்காக எடுக்கப்படும். ஆனால் கடந்த 9, 10–ந் தேதிகளில் காற்றாலை மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் நிறுத்தப்பட்ட அனல் மின்நிலையத்தை உடனடியாக இயக்கினாலும் மின்உற்பத்தி செய்ய 12 மணி நேரம் ஆகும். பராமரிப்பு பணியில் இருக்கும் மின்உற்பத்தி எந்திரங்கள் பராமரிப்பு பணி முடியும் வரை இயக்க முடியாது. இதனால் 2 நாட்கள் அரை மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அதன்பிறகு முழுமையாக அனல் மின்நிலையம் இயக்கப்பட்டு மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் மின்தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எந்தவித மின்வெட்டும் இல்லை. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2015–ம் ஆண்டு முழு மின்வெட்டை நீக்கியதில் இருந்து, இன்று வரை தொடர்ந்து மின்மிகை மாநிலமாகத்தான் தமிழகம் உள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வர வேண்டும். ஆனால் சமீபத்தில் 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வந்தது. தற்போது கூடங்குளத்தில் இருந்து கிடைக்கக்கூடிய 500 மெகாவாட் மின்சாரமும் குறைந்து உள்ளது. ஆனாலும் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு, தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதே காரணம்.

ஒத்துழைக்க..

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் ஏற்கனவே மின்பாதை அமைப்பதற்கு எதிராக விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி உடன்குடி அனல்மின்நிலைய திட்டம் நடந்து வருகிறது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். மீனவர்களை பாதிக்காமல், அவர்களுடன் உடன்பாடு ஏற்பட்ட பிறகே பணிகள் மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இது போன்ற போராட்டங்களை தூண்டிவிடாமல், எதிர்க்காலத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மின்சார பாதைகளை கொண்டு வருவதாக இருந்தாலும், உற்பத்தியாக இருந்தாலும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

புதிய அனல்மின்நிலையங்கள்

தமிழ்நாட்டில் 2022–க்குள் 4 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையங்களை கொண்டு வருவோம். உடன்குடி, வடசென்னை, எண்ணூர் ஆகிய இடங்களில் இந்த அனல் மின்நிலையங்கள் அமைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தேவை என்றால் தூத்துக்குடி அனல்மின்நிலையமும் புதுப்பிக்கப்படும். தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மழைநீரை சேகரிப்பதற்கான தொட்டி கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின்நிலையம் பழுது நீக்கப்பட்டு புதிய அனல் மின்நிலையம் போன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மின்சார வாரியத்தில் உள்ள 800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. அங்கு கவுன்சிலிங் நடந்ததால், தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதம் தேர்வு நடத்தப்பட்டு, ஒளிவுமறைவு இல்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.


Next Story