முன்விரோதத்தில் விவசாயி கொடூர கொலை கொட்டகைக்கு தீ வைப்பு


முன்விரோதத்தில் விவசாயி கொடூர கொலை கொட்டகைக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 21 Sep 2018 10:15 PM GMT (Updated: 21 Sep 2018 5:32 PM GMT)

குன்னம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அவர் வசித்த கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் மனைவியை பிரிந்து தனது தாயார் அஞ்சலத்துடன் நன்னையில் உள்ள தனது வயலில் கொட்டகை அமைத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டகைக்கு பாண்டியன் தூங்க சென்றார். அவரது தாய் அஞ்சலம் அருகே உள்ள மற்றொரு கொட்டகையில் தூங்கினார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பாண்டியன் பூமாலை என்பவரது வீட்டின் வாசல் முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பாண்டியன் வசித்த கொட்டகை தீ வைத்து கொளுத்தப்பட்டு இருந்தது.

இதுபற்றி அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டியன் உடலை பார்வையிட்டனர். அப்போது பாண்டியன் உடலில் தலை, கழுத்து உள்ளிட்டவைகளில் படுகாயங்கள் இருந்தன. மேலும் கழுத்து மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டது போல் படுகாயங்கள் இருந்தன.

முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் கொட்டகையில் தூங்கி கொண்டிருந்த பாண்டியனை நள்ளிரவில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்து, அருகே உள்ள வீட்டின் முன்பு வீசி சென்றுள்ளனர். மேலும் பாண்டியன் வசித்த கொட்டகைக்கும் தீ வைத்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாண்டியன் இறந்து கிடந்த இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து நன்னையில் உள்ள நன்மை பாலம் அருகே வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது தொடர்பாக குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் நன்னை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story