சாத்தியார் அணை இந்த வருடமாவது நிரம்புமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
அலங்காநல்லூர் சாத்தியார் அணை இந்த வருடமாவது நிரம்புமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே வகுத்துமலை,மஞ்சமலை,சிறுமலை தொடர்ச்சி,கல்லுமலை மற்றும் செம்புத்துமலை மையமாக கொண்டு அமைந்துள்ளது சாத்தியார் அணை. இந்த அணை கடந்த 1966–ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணை 29 அடி நீர்மட்ட அளவை கொண்டது. இந்த அணைக்கு கீழச்சின்னன்பட்டி, எர்ரம்பட்டி, கோவில்பட்டி, அழகாபுரி, சுக்காம்பட்டி, அய்யூர், குறவன்குளம், முடுவார்பட்டி, ஆதனூர், கட்டியகாரன்குளம் ஆகிய 10 கிராம கண்மாய்கள் மூலம் சுமார் 2,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கடந்த 1993–ம் ஆண்டு பெரு மழை பெய்து அணையின் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து மதுரை செல்லூர் பகுதியை சேதபடுத்தியது. இந்த அணை கடந்த பல வருடங்களாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை முழுமையாக பெய்யாமல் விவசாயிகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் நன்கு மழை பெய்து இந்த வருடமாவது சாத்தியார் அணை நிரம்புமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி நாவல்குளம் கண்மாய் நீர்பாசன விவசாய சங்கதலைவர் நடராஜன் கூறிதாவது: – சாத்தியார்அணையை முழுமையாக தூர்வாரவேண்டும். ஏற்கனவே வண்டல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதித்து அந்த திட்டம் முழுமைபெறவில்லை. நீர்வரத்து வாய்க்காலை பொதுப்பணி துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து சீரமைக்கவேண்டும். மேலும் மீன்வளர்க்கும் பகுதி, மீன்பண்ணை தொட்டியும் தண்ணீர் இல்லாமல் கிடக்கிறது. இதனால் மீன்வளர்க்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தான் கைகொடுக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குறைவான நாட்களே இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு,மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரியார் கால்வாய் தண்ணீர் உபரிநீராக வரும் காலங்களில் ஆண்டிப்பட்டி பங்களா பகுதிகளில் இருந்து கால்வாய் அமைத்து பெரியார் தண்ணீரை சாத்தியார் அணைக்கு கொண்டுவந்தால் இப்பகுதி செழிப்புடன் இருக்கும். இதனால் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஆதனூர் பாசன விவசாயி தவமணி கண்ணன் கூறியதாவது – பலவருடங்களாக இந்த அணை நிரம்பாமல் போனதால் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கண்மாய்களும் வறண்டதால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கபட்டுஉள்ளது. இந்த ஆண்டு முழுமையாக பருவமழையை நம்பியே இப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர். வறண்ட நிலை ஏற்பட்டதால் தென்னை, மா, கொய்யா மரங்கள் உள்ளிட்ட பணபயிர்கள் பட்டுப்போய் விவசாயிகள் பாதிக்கபட்ட மரங்களை அப்புறபடுத்திவிட்டனர். இதற்காக அரசு சம்பந்தபட்ட வருவாய்துறை மூலம் ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சாத்தியார் அணை பாசன விவசாயிகள் சார்பாக ராமராஜ் கூறியதாவது – முல்லைபெரியார் அணையில் இருந்து பிரதான கால்வாய்களில் விவசாயத்திற்காக தண்ணீர் செல்கிறது. சாத்தியார் அணைக்கு வருடந்தோறும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் நிலக்கோட்டை–விளாம்பட்டி, வாடிப்பட்டி, ஆண்டிபட்டி பங்களா, கச்சகட்டி, மேட்டுபட்டி மற்றும் கொழிஞ்சிபட்டி வழியாக கால்வாய் அமைத்து சாத்தியார் அணைக்கு தண்ணீர் கொண்டுவந்தால் இப்பகுதி எப்போதும் செழிப்புடன் இருக்கும்.மேலும் கரும்பு விவசாயிகளும் பயன்பெறுவார்கள். கால்வாய் அமைக்கும் பணியை ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணிதுறை ஆய்வு செய்தது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் இந்த அணை குறித்து கூறியதாவது – மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியை சேர்ந்த அலங்காநல்லூர்,பாலமேடு பகுதிகளை இணைக்கும் சாத்தியார் அணை சுற்றுலா தலமாக ஏற்கனவே அரசு தேர்வு செய்துள்ளது. அதற்கான நிதிஆதாரங்கள் வரபெற்றதும் சில மாதங்களில் அரசு அனுமதியுடன் பணிகள் தொடங்கப்படும். இயற்கை எழில் பசுமை நிறைந்த இந்த அணை முன்பாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வசதிகள் செய்யப்படும். இந்த பகுதியில் உள்ள மலையில் வனவிலங்குகளையும், பறவை இணங்களையும் காப்பதற்க்கு வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சாத்தியார் அணை பொதுப்பணிதுறை உதவி அதிகாரி செந்தில் கூறியதாவது:– அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய்களில் மழை நீர் தங்குதடையின்றி வருவதற்கு காண்காணிக்கபட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழையினால் இந்த அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.