கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்


கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Sep 2018 11:30 PM GMT (Updated: 21 Sep 2018 7:35 PM GMT)

விருகம்பாக்கத்தில், நடிகர் கருணாசை கண்டித்து நாடார் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்-அமைச்சர் மற்றும் போலீசாரை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் கருணாசின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜர் ஆதித்தனார் கழகம், சென்னை நாடார் சங்கம், தமிழ்நாடு நாடார் சங்கம், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை மற்றும் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் விருகம்பாக்கம், தசரதபுரம்

கருணாசை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசும் கருணாசை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து வடபழனி உதவி கமிஷனர் சங்கர் தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட நாடார் சங்கத்தினரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலை முன்பு நேற்று மாலை கூடிய தமிழ்நாடு நாடார் கூட்டமைப்பினர், அந்த அமைப்பின் ராஜா பிரபு, லீலா குமார் ஆகியோர் தலைமையில் கருணாசின் பேச்சை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் கருணாசின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த மெரினா இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார், அதனை தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நாடார் கூட்டமைப்பை சார்ந்த 8 பெண்கள் உள்பட 16 பேரை கைது செய்தனர்.

Next Story