டேங்கர் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய பெட்ரோல்
உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்ததில், அதில் இருந்த பெட்ரோல் ஆறாக ஓடியது. இதை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்து சென்றனர்.
உளுந்தூர்பேட்டை,
சென்னை மணலியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 24 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசலுடன் டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது. அதனை கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ராசு மகன் காளியப்பன் (வயது 29) என்பவர் ஓட்டினார். அவருடன் தோகைமலையை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்ற கிளனர் வந்தார்.
அந்த டேங்கர் லாரி நேற்று அதிகாலை 5 மணியளவில் உளுந்தூர் பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி டிரைவர் காளியப்பன், கிளனர் சதீஷ்குமார் ஆகியோர் காயமடைந்தனர். இதற்கிடையே கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல், டீசல் வெளியேறி அந்த பகுதியில் ஆறாக ஓடியது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், டேங்கர் லாரியில் இருந்து வீணாக பெட்ரோல், டீசல் வெளியேறிய சம்பவம் செங்குறிச்சி பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. உடனே அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து, பெட்ரோல், டீசலை போட்டி போட்டு கொண்டு தாங்கள் எடுத்து வந்த பாத்திரங்கள் மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய டீசல், பெட்ரோலை பிடித்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து போலீசார் விபத்தில் பலத்த காயமடைந்த டிரைவர் காளியப்பன் மற்றும் கிளனரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முன்னதாக பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து கிடப்பதால் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்து விடக் கூடாது என்பதற்காக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இந்த நிலையில் அங்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விபத்துகுள்ளான டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல், டீசல் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் தீ பற்றி கொள்ளாத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கவிழ்ந்த டேங்கர் லாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story