ஐகோர்ட்டு உத்தரவுப்படி மண் குவாரிகளில் விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட மண் குவாரிகளில் விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தில் கண்மாய், வரத்துகால்வாய், புறம்போக்கு நிலங்களிலும், பட்டா நிலங்களிலும், சவுடு மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது அதற்கான விதிமுறைகள் அனுமதி பெற்றவரிடம் தெளிவாக சொல்லப்படுவதோடு அதுபற்றி பொது அறிவிப்பாகவும் வெளியிடப்படுகிறது.
ஆனால் இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்ட மண் குவாரிகளில் விதிமுறைகளுக்கு முரணாக மண் அள்ளப்படுவதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்திடமும், கனிம வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் கூறி வருகின்றனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் சிலர் நீதிமன்றங்களை அணுகி அந்த குவாரிகள் செயல்படுவதற்கு தடை ஆணை பெறும் நிலை இருந்து வருகிறது.
இந்த பிரச்சினையில் சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் சவுடுமண் குவாரிகளுக்கு விதிக்கப்படும் தடைகளை நீக்கியதோடு, மாவட்ட நிர்வாகமும், கனிம வளத்துறை அதிகாரிகளும் அனுமதி அளிக்கப்பட்ட மண் குவாரிகளை அவ்வபோது ஆய்வு செய்து விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்ட மண் குவாரிகளால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது இந்த மண் குவாரிகளை ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் உடனடியாக அந்த குவாரிகளுக்கான உரிமம் ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.