அதியமான்கோட்டை அருகே பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


அதியமான்கோட்டை அருகே பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:15 AM IST (Updated: 22 Sept 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை அருகே மகன்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 45), தொழிலாளி. இவருக்கு சக்தி, வீரமணி என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு குருமன்ஸ் சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் பல முறை விண்ணப்பித்தும், மனு கொடுத்தும் இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை மகன்களுக்கு குருமன்ஸ் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி முனிராஜ் அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் அருகில் உள்ள 200 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்து சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் தர்மபுரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் முனிராஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மகன்களுக்கு குருமன்ஸ் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு வந்து கலெக்டரிடம் பேசி சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் அவர் சமாதானம் அடைந்தார். இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் முனிராஜை பத்திரமாக செல்போன் கோபுரத்தில் இருந்து இறக்கி கொண்டு வந்தனர்.

பின்னர் அவரை விசாரணைக்காக அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி விசாரணை நடத்தினார். செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story