‘ஸ்மார்ட்’ நகரம் திட்டத்துக்காக தரைக்கடைகளை அகற்றுவதை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


‘ஸ்மார்ட்’ நகரம் திட்டத்துக்காக தரைக்கடைகளை அகற்றுவதை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:00 AM IST (Updated: 22 Sept 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ‘ஸ்மார்ட்’ நகரம் திட்டத்துக்காக தரைக்கடைகளை அகற்றுவதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று திருச்சி மாநகர தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

தேசிய சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் 2016-ன்படி தரைக்கடை வியாபாரிகளுக்கு மாநில அரசின் உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டும், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி திருச்சி நகரில் அதிகாரிகள், வியாபாரிகள் கொண்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும், திருச்சியில் ‘ஸ்மார்ட்‘ நகரம் அமைக்கிறோம் என கூறிக்கொண்டு தரைக்கடை வியாபாரிகளை அகற்றுவதற்கு மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சம்பத் பேசும்போது ‘பெரு முதலாளிகள் பயன் அடைய வேண்டும் என்பதற்காக ‘ஸ்மார்ட் சிட்டி‘ என்ற பெயரில் சாலையோர மற்றும் தரைக்கடை வியாபாரிகளை அகற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் கூட சாலையோர கடைகள் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன. ஸ்மார்ட் சிட்டிக்காக தரைக்கடைகளை அகற்றினால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் செல்வி மற்றும் ஏராளமான தரைக்கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story