துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.47 லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.47 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:29 AM IST (Updated: 22 Sept 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.47 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு,

மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம், துபாயில் இருந்து மங்களூருவுக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த நபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் அவருடைய உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த நபர், துபாயில் இருந்து செல்போன் கவரில் மறைத்து வைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த நிசார் காதர் முல்லேரியா (வயது 32) என்பதும், அவர் துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 12 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 1,515 கிலோ 270 கிராம் எடை கொண்ட இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை பிடித்து, பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நிசாரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story