காந்தி சிலை முன் போலீஸ் ஏட்டு மகன் தர்ணா; படத்துடன் அமர்ந்து திடீர் போராட்டம்
ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து குண்டுவெடிப்பில் பலியான போலீஸ் ஏட்டு மகன் புதுவை கடற்கரையில் காந்தி சிலை முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி ஆலோசனை செய்து அவர்களை விடுவிக்குமாறு கவர்னருக்கு பரிந்துரை செய்தது.
இந்தநிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் மனிதவெடிகுண்டால் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த குண்டுவெடிப்பின்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு தர்மன் என்பவரும் கொல்லப்பட்டார். அவரது 3–வது மகன் ராஜ்குமார் (வயது 33) புதுவையை அடுத்த தமிழக பகுதியான கலைவாணர் நகரில் தற்போது வசித்து வருகிறார்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் நேற்று காலை புதுவை கடற்கரை காந்தி சிலைக்கு வந்தார். கையில் தனது தந்தையான போலீஸ் ஏட்டு தர்மனின் புகைப்படத்தை வைத்து இருந்தார். திடீரென்று காந்தி சிலை முன்பு அமர்ந்து, நீதி வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த கோரிக்கை அட்டையுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் அவரிடம் விவரம் கேட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜ்குமாரிடம் விசாரித்தனர். காந்தி சிலை பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.
போராட்டம் குறித்து நிருபர்களிடம் ராஜ்குமார் கூறியதாவது:-
ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ்காந்தி வந்தபோது அப்போது நடந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு பணிக்கு சென்ற எனது தந்தையும் கொல்லப்பட்டார். அவரது இறப்பினால் எனது தாய் வேதவள்ளி, எனது அண்ணன், அக்கா ஆகியோர் அனாதையானோம். எனக்கு அப்போது 8 வயதுதான். எனது தந்தையின் சாவுக்குப்பின் எங்கள் வாழ்க்கை திசைமாறியது. குடும்பத்தை வறுமை வாட்டியது.
எனது தாய்க்கும் படிப்பறிவு குறைவு. 5 வருடத்துக்கு பின்னர்தான் அவருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. அதற்குள் நாங்கள் பட்டபாட்டினை இந்த உலகம் அறியாது.
இப்போது கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் என் தந்தை போன்றவர்கள் செய்த உயிர்தியாகத்துக்கு ஏது மரியாதை? அந்த குண்டு வெடிப்பின்போது 13 குடும்ப தலைவர்கள் இறந்தனர். அவர்களின் குடும்பம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
தந்தையை இழந்த நாங்களும் தமிழர்கள்தான். இது உலக தமிழ் மக்களுக்கு தெரியவேண்டும்.
இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.