பறக்கும் டாக்சி சேவை இங்கிலாந்தில் அறிமுகம்!


பறக்கும் டாக்சி சேவை இங்கிலாந்தில் அறிமுகம்!
x
தினத்தந்தி 22 Sep 2018 5:13 AM GMT (Updated: 22 Sep 2018 5:13 AM GMT)

சாலையில் ஓடும் டாக்சிகளுக்குப் பதிலாக வானில் பறக்கும் விமான டாக்சி சேவை இங்கிலாந்தில் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த விமான டாக்சி அமையும் என்பதால் எதிர்காலத்தில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும், எரிபொருள் தேவையைக் குறைக்கும் வகையிலும் பல்வேறு விதமான வாகனங்களை உலக நாடுகள் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல், டீசலால் ஏற்படும் மாசைக் குறைக்கும் வகையிலான வாகன தயாரிப்புக்கு பல்வேறு நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன. அந்த வகையில், மின்சார இருசக்கர வாகனங்கள் முதல் கார்கள் வரை சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலில், நகரமயமாக்கலின் நெரிசலில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ளவும், விரைவாக விரும்பும் இடத்துக்குச் சென்று சேரவும் விமான டாக்சி சேவை இங்கிலாந்தில் அறிமுகமாக உள்ளது.

பல்வேறு பகுதிகளுக்கு இடையில், குறிப்பாக குறுகிய தூரங்களில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல விமான டாக்சி சேவை பயன்படுத்தப்பட உள்ளது.

காரை போன்ற வடிவத்தைக் கொண்ட இந்த டாக்சியில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய முடியும். இது ஆரம்பத்தில் தாழ்வான உயரத்தில் இயக் கப்படும் என்று தெரிகிறது. மக்களிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நீண்ட தூரம் பயணிக்கும் வகையிலும் விமான டாக்சி சேவை விரிவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. டிரோன் மற்றும் குவாட்காப்டர் தொழில் நுட்பத்தில் இந்த டாக்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சிவில் ஏவியேஷன் அதிகாரிகளிடம் அனுமதி பெற பறக்கும் டாக்சி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ரேஸ் கார் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விமான டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்தே மேலே பறக்கும் இந்த விமானம் இப்போதைக்கு நகர்ப்புறங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விமான டாக்சியில் அதிகபட்சமாக 500 மைல் தூரம் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற் படாத வகையில் அமைந்துள்ள இத்தகைய கண்டுபிடிப்புகளால் எதிர்காலத்தில் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பறந்து பறந்து ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய மக்கள், இனி நிஜமாகவே பறக்க ஆரம்பித்துவிடுவார்கள்!'

Next Story