கல்லிடைக்குறிச்சி அருகே ரெயில்வே கேட் அமைக்கும் பணி தொடக்கம் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை


கல்லிடைக்குறிச்சி அருகே ரெயில்வே கேட் அமைக்கும் பணி தொடக்கம்  ஐகோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Sept 2018 3:00 AM IST (Updated: 22 Sept 2018 4:58 PM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே ரெயில்வே கேட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அம்பை, 

கல்லிடைக்குறிச்சி அருகே ரெயில்வே கேட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆளில்லா ரெயில்வே கிராசிங்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தாமிரபரணி– கன்னடியன் கால்வாய் இடையே ஆளில்லா ரெயில்வே கிராசிங் உள்ளது. இதனை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முதற்கட்ட பணியை கடந்த ஆகஸ்டு மாதம் 30–ந் தேதி தொடங்கியது. இந்த பணியை சில நாட்களுக்கு முன்பு மதுரை ரெயில்வே கோட்ட முதன்மை பொறியாளர் அமித்சிங், துணை முதன்மை பொறியாளர் சுசீந்திரன் ஆகியோர் தலைமையில், ரெயில்வே துறையினர் ஆய்வு செய்ய வந்தனர்.

இதனை அறிந்த காட்டுமன்னார்கோயில், தீட்சன் பச்சேரி மற்றும் திம்மராஜபுரம் பொதுமக்கள் ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு சுரங்கப்பாதை அமைத்தால் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாது. விவசாய இடுபொருட்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்லவும் இயலாது. எனவே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு, இப்பகுதியில் நிரந்தர ரெயில்வே கேட் அமைக்க வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

பணி தொடக்கம்

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த மாரியப்பன் என்பவர், சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அங்கு நிரந்தர ரெயில்வே கேட் அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அப்பகுதியில் ரெயில்வே கேட் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் 2 வாரத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story