செங்கோட்டையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு: சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது


செங்கோட்டையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு: சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 3:00 AM IST (Updated: 22 Sept 2018 8:34 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கோட்டை, 

செங்கோட்டையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலவரம் 

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அதன் காரணமாக செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குண்டாற்றில் கரைக்க முற்பட்டபோது மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி, செங்கோட்டை தாலுகாக்களில் கடந்த 15–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை (அதாவது நேற்று) 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. மேலும் 500–க்கும் மேற்பட்ட போலீசார் பகலும், இரவுமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

144 தடை உத்தரவு நீட்டிப்பு 

இந்தநிலையில் நேற்று காலை 144 தடை உத்தரவு முடியும் என எதிர்பார்த்த நிலையில் செங்கோட்டையில் 12 இடங்களில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. வருகிற 30–ந் தேதி காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி செங்கோட்டை ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் மேலும் ஒரு போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டை நகருக்குள் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. செங்கோட்டையில் அனைத்து கடைகளும் திறந்தும், வியாபாரம் இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். ஆட்டோக்கள், பஸ்கள் வழக்கம் போல் ஓடினாலும், பயணிகள் கூட்டம் இல்லை என டிரைவர்கள் கூறுகின்றனர். 144 தடை உத்தரவையொட்டி செங்கோட்டையில் வஜ்ரா வாகனம் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் 3 பேர் கைது 

செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை இருதரப்பை சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இருதரப்பை சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story