திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. போட்டியிடும் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. போட்டியிடும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மு.க.ஸ்டாலின் பாசிச பா.ஜ.க. ஆட்சி என்று கூறுகிறார். அவரது கட்சியினர் கள்ளத்துப்பாக்கி, பிரியாணி கடை பிரச்சினை, அழகு நிலையம், பேன்சி கடை பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க.வால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது பா.ஜ.க.வை என்ன செய்ய முடியும்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும் பா.ஜ.க. போட்டியிடும்.
தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். பா.ஜ.க. அரசு பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. பண மதிப்பீடு இந்தியாவை செம்மைப்படுத்தி இருக்கிறது.
ஊழல் புகாரில் முதல்–அமைச்சர், துணை முதல்– அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.