கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு
x
தினத்தந்தி 23 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செங்குன்றம்,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தை வகுத்தது. அதன் படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.

இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூர கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோமீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை கொடுக்க வேண்டிய 8 டி.எம்.சி. தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை. ஆந்திராவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் திறக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அக்டோபர் மாதம் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர். அதுவும் திறக்கப்பட ல்லை. இதற்கிடையே 15 நாட்களுக்கு முன்னர் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள சோமசீலா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து நேற்று 200 கன அடி தண்ணீர் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இந்த தண்ணீர் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் பயணித்து காளஹஸ்தி வந்ததும் அங்கிருந்து திருப்பதிக்கு குடிநீர் தேவைக்காக அனுப்பப்படும். ஒரு பகுதி தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்பப்படும்.

அவ்வாறு அனுப்பப்படும் தண்ணீர் வருகிற புதன் கிழமை தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

68 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் நேற்று 9 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

Next Story