ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது


ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இருவரும் தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் தனபால்(வயது 58). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 18-ந்தேதி மர்ம கும்பலால் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில், தனபாலை கடத்தி சென்றவர்களில் சிலரது செல்போன் எண்கள் கிடைத்தன.

அந்த செல்போன் எண்களை வைத்து போலீசார் கண்காணித்தபோது, தனபாலை கடத்திய கும்பல் திருச்சியில் இருந்து தஞ்சாவூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் குறிப்பிட்ட காரை துரத்தி சென்றனர். அதே வேளையில் திருவெறும்பூர் போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அருகே தனிப்படை போலீசார் மடக்கி துப்பாக்கி முனையில் காரில் இருந்த ரவுடி கும்பல் 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி அருகே ஓலையூர் காட்டுப்பகுதியில் கடத்தி வைக்கப்பட்டிருந்த ரியஸ் எஸ்டேட் அதிபர் தனபாலை தனிப்படையினர் மீட்டனர்.

இந்த வழக்கில் கடத்தப்பட்ட தனபாலின் தம்பி மணியின் நண்பரான முத்துச்செல்வம்(43), உறையூரை சேர்ந்த ரத்தினகுமார்(31), சென்னையை சேர்ந்த வக்கீல் பிரதீப்சரண்(24), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த வீரமணி(29), உறையூரை சேர்ந்த அருண்குமார்(25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சென்னை எர்ணாவூரை சேர்ந்த பிரபல ரவுடி பூமிநாதன், காட்டூர் ரவுடி தமிழ், இவரது தம்பி தென்னரசு, காட்டூர் பாத்திமாபுரத்தை சேர்ந்த திருவடி, பரமத்திவேலூரை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் பாண்டி ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட ரவுடி பூமிநாதன் மற்றும் அவரது கூட்டாளியான திருவடி(28) ஆகியோர் வழிப்பறி வழக்கு ஒன்றில் சிக்கி கைது செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வடிவேல்(41). இவர், ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் தனபாலின் உறவினர் ஆவார். கடந்த 21-ந் தேதி திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி அருகே வடிவேல் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிரபல ரவுடிகள் பூமிநாதன், தமிழ் மற்றும் காட்டூர் பாத்திமாநகரை சேர்ந்த திருவடி ஆகியோர் வடிவேலை வழிமறித்து ரூ.10 ஆயிரம் கேட்டனர். அதற்கு அவர் பணம் தரமறுத்து தகராறில் ஈடுபட்டார். உடனே மூவரும் கத்தியை காட்டி மிரட்டி வடிவேல் கழுத்தில் கிடந்த 3½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பூமிநாதன், அவரது கூட்டாளிகள் தமிழ், திருவடி ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் பூமிநாதன், திருவடி ஆகியோர் சுற்றுச்சுவர் ஒன்றில் ஏறி குதித்து தப்பி ஓட முயன்றனர். அப்போது இருவரும் கீழே தவறி விழுந்ததில் கால் முறிந்தது. காட்டூரை சேர்ந்த தமிழ் தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து பூமிநாதன், திருவடி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த பின்னர், அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story