சொத்தை பிரித்து தராததால் ஆத்திரம்: தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர் கைது


சொத்தை பிரித்து தராததால் ஆத்திரம்: தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 3:45 AM IST (Updated: 23 Sept 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

சொத்தை பிரித்து தராததால் ஆத்திரமடைந்து தந்தையை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம். குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி ராஜகுமாரி (40). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முதல் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகன் செல்வ பிரகாஷ் (26). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் தனது மனைவியை பிரிந்து தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து அங்கு தாயார் அஞ்சலத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பாண்டியன் அதே பகுதியில் உள்ள பூமாலை என்பவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் முதல் கட்ட விசாரணையில் பாண்டியனை அவரது மகன் செல்வபிரகாஷ் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் செல்வ பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது தாயாரை பிரிந்து தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டியுடன் வசித்து வந்தார். அவருக்கு சொந்தமாக விவசாய நிலம் ஏராளமாக உள்ளது. எனது சகோதரர் வெளிநாட்டில் வேலை பார்த்து நிறைய பணம் சம்பாதிக்கிறார். ஆனால் நான் இங்கு லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானம் எனக்கு மோதுமானதாக இல்லை. தனது தாயார் ராஜகுமாரியிடம், தந்தை பாண்டியன் தகாத வார்த்தையில் பேசி வந்தார். மேலும் நீண்ட நாட்களாக அவர் சொத்தை பிரித்து தராமல் இழுத்து அடித்து வந்தார்.

எனவே தந்தை பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டேன். கடந்த 20-ந் தேதி நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த தந்தையை கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று செல்வபிரகாஷ் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து செல்வ பிரகாசை குன்னம் போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story