கூடலூர் அருகே ஆதிவாசி கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்


கூடலூர் அருகே ஆதிவாசி கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 23 Sept 2018 3:30 AM IST (Updated: 23 Sept 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே ஆதிவாசிகளின் குடிசை வீடுகளை காட்டு யானைகள் இடித்து தள்ளியது. இதில் பாத்திரங்கள், பொருட்களும் சேதமடைந்தன. இதனால் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 65 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. ஓவேலி, தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. மேலும் இரவில் ஊருக்குள் புகுந்து வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

கூடலூர் அருகே முண்டக்குன்னு ஆதிவாசி கிராமத்தில் சுமார் 22 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் காட்டு யானைகள் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. கடந்த 1 வாரங்களாக 11 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் பல்வேறு பணிகளுக்காக கூடலூர் பகுதிக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பு இல்லாத சூழலால் மாலை நேரத்திலேயே விரைவாக வீடு திரும்ப வேண்டிய நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆதிவாசி மக்களின் குடிசைகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டது. இதனால் பீதியுடன் ஆதிவாசி மக்கள் தங்கள் குழந்தைகளுடன் இருந்தனர். அப்போது நேற்று விடியற்காலை 4 மணிக்கு மாதன் என்பவரது குடிசை வீட்டை காட்டு யானை ஒன்று தாக்கியது. இதில் குடிசை முழுவதும் சரிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த மாதன் தனது குடும்பத்தினருடன் அலறி அடித்து அங்கிருந்து ஓடி அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தஞ்சம் அடைந்தனர்

மேலும் இருட்டாக இருந்ததால் காட்டு யானைகள் எந்த பகுதியில் நிற்கிறது என தெரிய வில்லை. இதனால் ஆதிவாசி மக்கள் குடிசைகளை விட்டு வெளியே வர முடிய வில்லை. தொடர்ந்து செல்வி, மற்றொரு மாதன், ஆகியோரது குடிசை வீடுகளை காட்டு யானைகள் சூறையாடியது. இதில் குடிசைகள் சரிந்து கீழே விழுந்தது. அப்போது குடிசை வீடுகளில் இருந்தவர்கள் பயத்துடன் ஓடி வேறு குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக ஆதிவாசிகள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

பின்னர் விடிய விடிய அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகள் காலை 6 மணிக்கு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின்னர் குடிசைகளை விட்டு ஆதிவாசி மக்கள் வெளியே வந்தனர். அப்போது காட்டு யானைகள் 3 குடிசைகளை சேதப்படுத்தி உள்ளதை கண்டு கவலை அடைந்தனர்.

மேலும் அதன் உள்ளே இருந்த பாத்திரங்கள், பொருட்களையும் காட்டு யானைகள் உடைத்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த குடிசைகளை புதுப்பிக்க இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:–

முண்டக்குன்னு கிராமத்தில் 22 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். இதுவரை ஒரு குடும்பத்துக்கு கூட தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வில்லை. பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எங்களுக்கு வீடு கிடைக்க வில்லை. தொடர்ந்து புற்கள் வேய்ந்த குடிசை வீடுகளில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகிறோம்.

அடிக்கடி காட்டு யானைகளும் வந்து குடிசைகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. எனவே தொகுப்பு வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டுயானைகள் வருவதையும் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story