கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு: அடுத்த மாதம் விசாரணை தொடங்கும் - குழு தலைவர் ராஜேஸ்வரன் பேட்டி


கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு: அடுத்த மாதம் விசாரணை தொடங்கும் - குழு தலைவர் ராஜேஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 23 Sept 2018 3:52 AM IST (Updated: 23 Sept 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

‘கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் (அக்டோபர்) விசாரணை தொடங்கும்’ என்று அந்த குழு தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான எஸ்.ராஜேஸ்வரன் கூறினார்.

கோவை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழகத்தை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலம் என்று 5 மண்டலங்களாக பிரித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அதன்படி மேற்கு மண்டலத்தின் கீழ் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் தலைவராக ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேற்கு மண்டல கூட்டுறவு சங்கங்களின் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான அலுவலகம் கோவை ரெயில் நிலையம் எதிரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையிட கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பணிகளை பார்வையிடுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதியும் விசாரணை குழுவின் தலைவருமான ராஜேஸ்வரன் நேற்று கோவை வந்தார்.

அவரை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் எஸ்.ஆர்.வெங்கடேசன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகத்தின் மேலாண்மை இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர். அப்போது விசாரணை குழுவின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர் விசாரணை அரங்கு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து குழு தலைவர் ராஜேஸ்வரன் ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மேற்கு மண்டலத்தில் நடந்த கூட்டுறவு சங்க முறைகேடுகள் குறித்த புகார்கள், வேட்பாளர் மீதான புகார்கள் குறித்து தெரிவிப்பதற்கான அறிவிப்பு கடந்த 16–ந் தேதி வெளியிடப்பட்டது. மனுக்கள் அளிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30–ந் தேதி ஆகும். புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குழு அலுவலகத்தில் நேரிலோ, பதிவு தபால் மூலமாகவோ புகார் மனு அளிக்கலாம்.

மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் 3–ந் தேதிக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட வாக்காளர் அல்லது வேட்பாளர் மட்டுமே வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை எழுப்பலாம். அதே போன்று வேட்பு மனுக்களை அனுமதித்தல், அனுமதி மறுத்தல், திரும்ப பெறுதல் அல்லது நிராகரித்தல் தொடர்பான ஆட்சேபனைகளை சம்பந்தப்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்த வேட்பாளர்கள் மட்டுமே எழுப்ப முடியும்.

அதன்படி கடந்த 16–ந் தேதி முதல் இதுவரை 21 புகார் மனுக்கள் வந்துள்ளன. இதில் கோவை மாவட்டத்தில் இருந்து 3, ஈரோடு–12, சேலம்–2, நாமக்கல்–4 ஆக மொத்தம் 21 புகார் மனுக்கள் வந்துள்ளன. வருகிற 30–ந் தேதி வரை பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்து அடுத்த மாதம் (அக்டோபர்) 15–ந் தேதிக்கு மேல் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட புகார் மனுக்களை விசாரிக்கும் போது உறுப்பினர்களாக உள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மண்டல இணைப்பதிவாளர்கள் ஆகியோரும் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story