வில்லியனூர் அருகே கர்ப்பிணி கொலையில் கைதானவர் சிறையில் அடைப்பு


வில்லியனூர் அருகே கர்ப்பிணி கொலையில் கைதானவர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 23 Sep 2018 12:15 AM GMT (Updated: 22 Sep 2018 11:42 PM GMT)

வில்லியனூர் அருகே கழுத்தை அறுத்து கர்ப்பிணி கொலை செய்யப்பட்டதில் கைதானவர் சிறையில் அடைக்கப்பட்டார். தோஷம் கழிப்பதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் அவர் பணம் பறித்ததும் அம்பலமானது.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை வீதியை சேர்ந்தவர் அசோக் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (27). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (3) என்ற மகளும், ஜெயகணேஷ் (2) என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணவேணி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பாகூர் சாலையில் செங்கன்ஓடை பகுதியில் உள்ள காளி கோவில் அருகே சேலையால் கைகள் கட்டப்பட்டு, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த இடத்தில் எலுமிச்சம்பழம், குங்குமம் ஆகியவை சிதறிக் கிடந்ததால் ஏதோ ஒரு நோக்கத்துக்காக இந்த கொலை அரங்கேற்றப்பட்டு இருக்கிறது என்று முதலில் போலீசார் சந்தேகித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து விசாரித்ததில் அசோக் குடும்பத்தினருடன் அதே தெருவில் வசித்து வரும் கோவிந்தராஜ் (45) நெருங்கிப் பழகி ஏவல், பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அடிக்கடி பூஜைகள் நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் தோஷம் கழிப்பதாக நம்ப வைத்து கிருஷ்ணவேணியை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காளி கோவிலுக்கு அழைத்துச் சென்று பூஜை செய்வது போல் நாடகமாடி கழுத்தை அறுத்து கோவிந்தராஜ் கொலை செய்துள்ளார்.

பின்னர் கிருஷ்ணவேணி எடுத்து வந்து இருந்த 5 பவுன் நகை, அவர் அணிந்து இருந்த தோடு, தங்க தாலி உள்ளிட்ட நகைகளை கோவிந்தராஜ் கொள்ளையடித்தது அம்பலமானது. இதேபோல் இதற்கு முன் பல நேரங்களில் அசோக்கின் தாயார், தங்கை ஆகியோரிடம் இருந்தும் அவர்களது அறியாமையை பயன்படுத்தி தோஷம் நீக்குவதாகவும், பரிகாரம் செய்வதாகவும் கூறி அடிக்கடி கோவிந்தராஜ் பணம் பறித்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள், கிருஷ்ணவேணியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பின் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

பில்லி, சூனியம், செய்வினை, தோஷம் கழிப்பதாக நம்ப வைத்து பெண்களிடம் அடிக்கடி பணம் பறித்ததுடன் ஒரு பெண்ணின் உயிரையே பறித்து இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story