தங்க மழைக்குள் 102 வயது பாட்டி
மான் கவுர், 102 வயதான தடகள வீராங்கனை. இவர் தனது 93-வது வயதில்தான் தடகள பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார்.
மான் கவுர், 102 வயதான தடகள வீராங்கனை. இவர் தனது 93-வது வயதில்தான் தடகள பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார். நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்த தொடங்கியவர் குறுகிய காலத்திலேயே போட்டி களத்தில் பிரகாசிக்க தொடங்கி விட்டார்.
2011-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். மான் கவுருக்கு ஊக்கசக்தியாக அவருடைய மகன், குர்தேவ் விளங்கிக்கொண்டிருக்கிறார். 78 வயதாகும் இவரும் தடகள வீரர்தான். முதுமை யிலும் தாயார் உடல் வலிமையுடன் இருப்பதை கவனித்தவர், பயிற்சி அளித்து முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்க வைத்துவிட்டார்.
குர்தேவ், உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தாயாருக்கும் பிரத்யேக பயிற்சி அளித்து அந்த போட்டிகளில் பங்கேற்க வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100-104 வயது பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மான் கவுர் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நடந்த போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர். தொடர்ந்து இரண்டுமுறை தங்கப்பதக்கம் வென்றிருக்கும் மான் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
‘‘எனது தாயாருக்கு எந்தவிதமான உடல்நலக்கோளாறுகளும் வந்ததில்லை. 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை முதல் முயற்சியிலேயே 1 நிமிடம் 1 விநாடியில் கடந்துவிட்டார். அதனால் அவரால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடிந்தது’’ என்கிறார், குர்தேவ்.
Related Tags :
Next Story