காணாமல் போன நிலா-சுபா


காணாமல் போன நிலா-சுபா
x
தினத்தந்தி 23 Sept 2018 2:36 PM IST (Updated: 23 Sept 2018 2:36 PM IST)
t-max-icont-min-icon

நித்யன் முத்ராவை நம்ப முடியாமல் பார்த்தான். “நான் தனியா இருக்கேன்றேன்.. இங்க படுக்கலாமானு கேக்கறீங்க..?”

நித்யன் முத்ராவை நம்ப முடியாமல் பார்த்தான். “நான் தனியா இருக்கேன்றேன்.. இங்க படுக்கலாமானு கேக்கறீங்க..?”

“என் வீட்டுக்குள்ள அந்த தாயம்மா ஏதோ செய்ஞ்சு வெச்சிட்டாங்க.. அருணும் என்னை வீட்டுக்குள்ள விடமாட்டாரு.. நீங்களும் கதவை மூடிட்டா, நான் என்ன செய்வேன், நித்யன்..? ப்ளீஸ்.. நான் இங்க ஹால்ல ஓரமா படுத்துக்கறேன் நித்யன்..” என்று கண்ணீருடன் சொன்னாள் முத்ரா.

“இங்க கட்டில் இல்ல, சோபா இல்ல.. ஜமக்காளமும் பெட்ஷீட்டும்தான் தர முடியும்..”

“பரவாயில்ல..”

அவன் கொடுத்ததை ஹாலில் விரித்துப் படுத்தாள். “தேங்க்ஸ்.. உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு ஸாரி..”

“குட்நைட்..” என்று அவன் ஸ்விட்சில் கை வைத்ததும், “வேணாம், விளக்கை அணைக்க வேணாம்..” என்றாள், பதற்றத்துடன்.

“ரொம்ப பயந்திருக்கீங்க..” என்றான் நித்யன், தன் படுக்கையறைக் கதவைச் சாத்திக்கொண்டே.

முத்ரா படுத்தாள். படுக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தாள். முழங்கால்களைக் கட்டிக்கொண்டாள்.

‘தாயம்மாவுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா..? சாமி வருவது, முனி இறங்குவது இதெல்லாம் உண்மைதானா..? தாயம்மாவிடம் மன்னிப்பு கேட்டால், எல்லாம் சரியாகிவிடுமா..?’

அவளுக்குப் புரியவில்லை. உடல் அசதியில் கண்கள் மூடினால், கெட்ட கனவுகளாக வந்து அச்சுறுத்தின. இரவு முழுவதும் தூக்கமின்றி, காலை எழுந்திருந்தபோது கண்கள் சிவந்து கிடந்தன.

* * *

அதிகாலை ஆறு மணிக்கு நித்யனின் படுக்கையறையில் அலாரம் அடிக்கும் ஒலி கேட்டு, முத்ரா கலைந்து எழுந்தாள். ஜன்னல் வழியே சூரிய வெளிச்சம் உள்ளே நுழைந்திருந்தது. இரவு இருட்டில் இருந்த பயம், காலை வெளிச்சத்தில் குறைந்திருந்தது.

நித்யன் படுக்கையறையைவிட்டு வெளியில் வந்தான். “வாங்க.. நானும் உங்ககூட வீட்டுக்கு வரேன். போய்ப் பார்ப்போம்..” என்றான்.

வாசலுக்கு வந்ததும், நித்யனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் முத்ரா. “அங்க பாருங்க.. வீட்டு நிலைப்படில பச்சையா ஒரு துணி மூட்டை தொங்குது.. இதுக்கு முன்னால நான் பார்த்ததே இல்ல..!”

நித்யன் அவளிடமிருந்து விடுபட்டு, அதைக் கழற்றினான். பிரித்தான். உள்ளே கைகொள்ளாத அளவு மிளகாய் வற்றல், ஒரு எலுமிச்சம்பழம் இவை வைத்துக் கட்டப்பட்டிருந்தன.

“இதை யாரு கட்டினாங்க..? எதுக்குக் கட்டினாங்க..? புரியலையே..?”

நித்யன் அதிலிருந்து இரண்டடி பின்வாங்கி நின்றான்.

“இதெல்லாம் அமானுஷ்யமான வேலை செய்யறவங்கதான் பயன்படுத்துவாங்க. எனக்கும் புரியல.. சாவியைக் குடுங்க..” என்று முத்ராவிடமிருந்து சாவியை வாங்கி, அவள் வீட்டுக் கதவைத் திறந்தான். உள்ளே அடியெடுத்து வைத்தவன், சட்டென்று வெளியில் வந்தான். அவன் கண்களில் கண்ணீர். பேச முடியாமல் இருமினான்.

“என்னாச்சு..?” என்றாள் முத்ரா.

அடைத்து வைக்கப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து மிளகாய் வற்றலின் கமறல் குப்பென்று வெளியேறி அந்தக் கேள்விக்கு பதில் சொன்னது. அது முத்ராவின் முகத்தையும் தாக்கியது. அவளும் கடுமையாக இரும ஆரம்பித்தாள்.

“பிரத்யங்கரா தேவி கோவில்ல எதிரிகளை அழிக்கறதுக்கு ஹோமத்துல மிளகாய் வற்றல் போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, வீட்டுக்குள்ள யார் வந்து பண்ணாங்க..? வீடோ பூட்டியிருக்கு. ரெண்டு சாவியும் உங்ககிட்ட இருக்கு.. யார் வந்திருக்க முடியும்..?” என்று நித்யன் முகத்துக்கு நேரே கையை ஆட்டி புகையை விரட்டினான்.

“அருண்..?”

“ச்சீ.. அருண் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யறவரா எனக்குத் தெரியல..” என்றபடி முகத்தில் துணி கட்டி, கதவுகள் ஜன்னல்கள் எல்லாவற்றையும் திறந்துவிட்டான், நித்யன்.

வீட்டுக்குள்ளிருந்த புகை, அந்தத் திறப்புகள் வழியே வெளியேறி சற்று அடங்கியதும், மூக்கில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு, முத்ராவும் நுழைந்தாள். வீடு கலைந்து கிடந்தது. ஹாலின் நான்கு மூலைகளிலும் குங்குமப்பொட்டு வைத்த எலுமிச்சைகள் உருட்டிவிடப்பட்டிருந்தன.

“அதெல்லாம் தொடாதீங்க..!” என்றான் நித்யன்.

முத்ரா சிறு நடுக்கத்துடன் அடியெடுத்து வைக்க, “நில்லுங்க.. இது என்னது..?” என்று கேட்டான் நித்யன்.

முத்ரா குனிந்து பார்த்தாள். தரையில் அங்கங்கே சிவப்பாய் ஏதோ கறை. நித்யன் அமர்ந்து அருகில் பார்த்தான்.

“ரத்தக் கறைங்க..! அதுவும் காலடித் தடம் மாதிரி தெரியுது. மனுஷக் காலடியாவும் இல்ல.. பாருங்க.. கட்டை விரலும், அடுத்த விரலும் காணும். மூணு, மூணு விரல் மட்டும் பதிஞ்சிருக்கு.. ஏதோ விபரீதமான மிருகமா..? புரியலையே..?”

அந்தக் காலடித் தடங்களைப் பின்பற்றி அவன் நடந்தான். பார்த்தால், முத்ராவின் கட்டில் வரை சென்று அது மறைந்திருந்தது.

“இதுதான் கட்டிலைப் பிடிச்சு ஆட்டியிருக்கா..?” என்றாள் முத்ரா, நடுங்கும் குரலில்.

“தெரியலையே..? வந்தது எங்க போச்சு..? திரும்பிப்போன காலடித் தடத்தையே காணலையே..?”

முத்ரா மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தாள். அருணுக்கு போன் செய்தாள்.

“அருண், தயவுசெஞ்சு மேல வாங்க..”

“நேரமில்ல, எனக்கு வேலை இருக்கு..”

“ப்ளீஸ் அருண்.. வந்து நம்ம வீட்ல என்ன நடந்திருக்குன்னு பாருங்க..”

“நம்ம வீடு..! உன் வீடுன்னுதானே சொந்தம் கொண்டாடுவே..? குழாய் ஏதாவது உடைஞ்சு, வீடு பூரா தண்ணியா..?”

“அய்யோ, இல்ல..! மாடிக்கு வந்து பாருங்களேன்..!”

சற்று நேரத்தில் அருண், லுங்கியும் பனியனும் மேலே போர்த்திய துண்டுமாக வந்துசேர்ந்தான்.

“மிளகாய் வற்றல் வெச்சு என்ன பண்ணே முத்ரா..? வீட்டுக்குள்ளயே நுழையவே முடியல..?”

“கீழ பாருங்க அருண்..!”

அருண் வீட்டுக்குள் வராமல் வெளியிலிருந்தே எட்டிப் பார்த்தான். “என்னது இது..? ஏதோ கரடி நடந்த மாதிரி..?”

முத்ராவும், நித்யனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“திடீர்னு இந்த வீட்ல அமானுஷ்யமா ஏதேதோ நடக்குது. நேத்து, திடீர்னு வீட்டுக்குள்ள நித்யன் படுத்துக் கிடந்தாரு.. அந்தப் படுக்கை விரிப்பையே நான் மாத்திட்டேன். இப்ப, திரும்பவும் பழைய படுக்கை விரிப்பு கலைஞ்சு கிடக்கு. ராத்திரி கட்டில் ஆடுது.. இப்ப வீடு பூரா மிளகாய்க் கமறல். உங்களைக் கேட்டா, ‘தாயம்மாவை எதுக்கு பகைச்சுக்கிட்டே..?’ன்னு ஒரே கேள்வில மடக்கறீங்க.. நான் தாயம்மாகிட்ட மன்னிப்பு கேக்க ரெடி.. முதல்ல இதையெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க..”

“நிறுத்தறது அவ்வளவு சுலபமில்ல..”

“ஆமா முத்ரா.. பில்லி சூனியம் வெக்கறது சுலபம். எடுக்கறது ரொம்பக் கஷ்டம்..!” என்றான் நித்யன்.

முத்ரா கால் மாற்றி நின்றாள்.

“உங்க வீட்டுக்குள்ள இவ்வளவு கலாட்டா நடக்கணும்னா, இங்கயே அந்த சக்தி இருக்கணும்.. தேடிப் பாருங்க..”

“எனக்கு பயமாயிருக்கு.. நீங்களே பாருங்க, நித்யன்..”

“உங்க அலமாரியை திறந்து பார்க்கலாமா..?”

“ம்..” என்றாள்.

நித்யன், மேஜை, சோபா, கட்டில் என்று எல்லாவற்றுக்கும் அடியில் தேடினான். கையில் ஒரு குச்சி வைத்து அலமாரி ஹேங்கர்களில் தொங்கிய அவள் உடைகளை ஒரு பக்கமாக ஒதுக்கினான். மின்சாரத்தைத் தொட்டுவிட்டவன் போல் திடுக்கிட்டு, இரண்டடி பின்வாங்கினான்.

“இது.. இது..” என்று அந்தப் பிரம்பால் சுட்டிக் காட்டினான். அங்கே சாண் நீளத்துக்கு பெண் பொம்மை ஒன்று. அதன் வயிற்றில் ஒரு ஊசி குத்திட்டு நின்றிருந்தது.

“இது, நெஜமாவே பில்லி சூனியமா இருந்தா, உங்களுக்கு இன்னிக்கு வயித்துவலி வரும், முத்ரா. இல்லேனா இது வெறும் மிரட்டல்தான்..”

முத்ரா பரபரவென்று வெளியில் வந்து அருண் அருகில் நின்றுகொண்டாள்.

“நான் இந்த வீட்டுக்குள்ள வர மாட்டேன்.. நித்யன், அந்த ட்ரெஸ்ஸைலாம் எடுத்திட்டு வந்திருங்க.. இன்னிக்கு உங்க வீட்டுலயே குளிச்சுக்கறேன் ப்ளீஸ்..!” என்றாள்.

நித்யனும் மிரண்ட முகத்துடன் வெளியில் வந்தான்.

“என்ன அருண் இதெல்லாம்? இப்படியிருந்தா, எப்படி என் குடும்பத்தைலாம் இங்க குடித்தனம் வெக்க முடியும்..?” என்று நித்யன் கடுமையான குரலில் கேட்டான்.

“ஆனா, தாயம்மாவுக்கு உங்கமேல கோபமில்லியே, நித்யன்..!”

“அப்படியே முத்ராவை மட்டும் தண்டிக்கணும்னு தாயம்மா நினைச்சாலும், இதெல்லாம் தேவையா..? அவங்ககிட்ட நீங்க கொஞ்சம் பேசி, நிறுத்தச் சொல்ல முடியாதா..?”

“நான் மன்னிப்பு கேக்க ரெடி” என்றாள், முத்ரா.

“சொல்லிப் பாக்கறேன்..” என்றான் அருண்.

***

அது ஒரு காபி ஷாப்.

கார்த்திக்கும், எதிரில் முத்ராவும் அமர்ந்திருந்தார்கள்.

“என்ன திடீர்னு என் மேல இவ்வளவு அன்பு..? என்னை உடனே பார்க்கணும்னு விடாம போன் பண்ணிப் பிடிவாதம் பிடிச்சே..?” என்று கார்த்திக் கேட்டான்.

“நீ எனக்கு ஒரு உதவி செய்யணும், கார்த்திக்..”

முத்ரா கேட்ட உதவி கேட்டு கார்த்திக் குழம்பிப்போனான்.

-தொடரும்

Next Story