பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பம் கண்மாயில் வீச்சு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் கண்மாயில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தாயில்பட்டி,
வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டதோடு புதிதாக பெயர் சேர்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் படிவங்கள் வழங்கப்படுகிறது. இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாயில்பட்டி அருகேயுள்ள கோட்டையூர் ராமலிங்காபுரத்தில் உள்ள கண்மாயில் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.ம.மு.க. மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா தனசேகரன் அங்கு சென்று பார்வையிட்டார். அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு உருவானது.
கண்மாயில் கிடந்த 8 விண்ணப்பங்களை கவிதா தனசேகரன் எடுத்துக்கொண்டார். அவை 10 நாட்களுக்கு முன்பு பூர்த்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாகும். படிவத்தில் புகைப்படம் மற்றும் வயதுக்குரிய ஆதார விவரங்கள் இணைக்கப்பட்டு இருந்தன.
இந்த கண்மாயின் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடம் வாக்குச்சாவடி மையமாகவும் உள்ளது. அங்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் தான் கண்மாயில் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது.
புதிதாக சேர விண்ணப்பித்தோர் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை கண்மாயில் வீசியுள்ளனர் என்று கவிதா தனசேகரன் தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறிய அவர் அந்த விண்ணப்பங்களை எடுத்துச்சென்றார்.