சிவன் கோவிலில் பணம், பொருட்கள் திருட்டு


சிவன் கோவிலில் பணம், பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 24 Sept 2018 3:00 AM IST (Updated: 23 Sept 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே சிவன் கோவிலில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பட்டிவீரன்பட்டி, 


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம்-மருதாநதி அணை ரோட்டில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜசோலை ஈஸ்வரன் என்னும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் சனி மகா பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு பூஜைகள் முடிந்த பின்பு கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை உண்டியலில் இருந்து எடுத்தனர். பின்னர் கோவிலில் உள்ள பீரோவில் வைத்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று அதிகாலை பூசாரி சோமசுந்தரம், கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகிகளுக்கும், பட்டிவீரன்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்கள், குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிதரன், கொடுத்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story