ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்


ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 24 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தையை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பர் கார்த்தி. இவருடைய மகள் சிவதர்ஷினி (வயது2½). நேற்று அன்புச்செல்வனின் வீட்டின் முன்பு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி எந்திரம் மூலமாக நடந்தது.

மதியம் 2 மணி அளவில் கிணறு அமைக்கும் பணியாளர்கள் சாப்பிட சென்றனர். அப்போது பலகையால் ஆழ்துளை கிணறு மூடப்பட்டிருந்தது.


இந்த நிலையில் அங்கு தனது வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்த சிவதர்ஷினி, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கதறி அழுதனர். இதுதொடர்பாக உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.


ஆழ்துளை கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்க வழியில்லாததால், கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் பக்கவாட்டில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட குழாயை வெட்டி எடுத்த தீயணைப்பு படைவீரர்கள், குழந்தையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தைக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து குழந்தை நலம் அடைந்தது.


முன்னதாக மீட்பு பணிகளை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர்.

குழந்தையை மீட்கும் பணி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. மீட்கப்படும் வரை ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையின் நிலை என்ன என்பதை அறிய முடியாமல் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த பதற்றத்துக்கு ஆளானார்கள். மீட்பு பணி நடந்த நேரம் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சி அளித்தது. குழந்தையை மீட்ட பின்னரே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story