அகல பாதை பணியால் நிறுத்தப்பட்ட காரைக்குடி– பட்டுக்கோட்டை பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கம்


அகல பாதை பணியால் நிறுத்தப்பட்ட காரைக்குடி– பட்டுக்கோட்டை பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 23 Sep 2018 9:45 PM GMT (Updated: 23 Sep 2018 5:24 PM GMT)

காரைக்குடி –பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணியால் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் கடந்த 6 ஆண்டுகள் நடைபெற்று முடிவடைந்து, கடந்த ஜூலை மாதம் 2–ந்தேதி முதல் இந்த வழித்தடத்தில் காரைக்குடி–பட்டுக்கோட்டை பாசஞ்சர் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து ஒருமாத காலத்தில் இந்த ரெயிலில் போதிய வருமானம் இல்லை என்ற காரணத்தை ரெயில் நிர்வாகம் கூறி கடந்த ஆகஸ்டு மாதம் 16–ம் தேதியுடன் இந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரெயில் காலை 9.45 மணிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு மீண்டும் இயக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வருகிற 1–ந்தேதி வரை 10 நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்றும், பின்பு இந்த ரெயில் தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அதற்கு பின்னர் இந்த ரெயில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே இயக்கப்பட்டது.

இந்த ரெயிலை காரைக்குடியில் இருந்து சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு இயக்க வேண்டும் என்று காரைக்குடி வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் சார்பில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனுவும் அளித்திருந்தனர். இந்தநிலையில் இந்த ரெயில் சரிவர இயக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் தரப்பில் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க காரைக்குடி–மதுரை இடையே புதிய ரெயில்வே வழித்தடத்தை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக காரைக்குடி, தேவகோட்டை, சாக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த திட்டம் அவர்களுக்கு காணல் நீர் போல் ஆனது. மேலும் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 100–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக அளவில் பல்வேறு தேவைகளுக்காக மதுரைக்கு தினமும் சென்று வருகின்றனர்.

காரைக்குடி–மதுரைக்கு நேரடி ரெயில் சேவை வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இவர்களின் கனவு திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. காரைக்குடியில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டுமானால் கால நேரமும், பணமும் அதிக அளவில் வீணாகிறது என்பதால், இந்த ரெயில் சேவையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Next Story