சாலை பணிகள் முடிந்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மின் இணைப்பு கொடுக்க வலியுறுத்தல்
மதுரை–பரமக்குடி இடையே 4 வழிச்சாலை பணிகள் முடிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் மின் இணைப்பு கொடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
மதுரை–பரமக்குடி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்த பின்பும் மின் இணைப்பு வழங்கப்படாததால் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதில் திருப்பாச்சேத்தி, சத்திரக்குடி அருகே என இரு இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறை, ஓய்வு அறை உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கழிப்பறை, சுங்கச்சாவடி அமைந்துள்ள இடங்களில் இருபுறமும் உயர்மட்ட மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
சுகாதார வளாகம் உள்ளிட்டவற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் இவற்றிற்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பயன்பாடின்றி இருட்டில் சுங்கச்சாவடி, சுகாதார வளாகங்கள் உள்ளன. நான்கு வழிச்சாலையில் சுங்க கட்டணம் விரைவில் வசூலிக்கப்பட உள்ளது. மின் இணைப்பு வழங்கப்படாததால் பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.
இதுகுறித்து ஒப்பந்தகாரர்கள் தரப்பில் கூறும்போது, சுங்கச்சாவடி கட்டிடங்கள், கழிப்பறைகளுக்கு மின்வசதி செய்து முழுமையாக முடித்துள்ளோம், தெரு விளக்குகளுக்கும் மின்வசதி செய்து, மின் வாரியத்திற்கு முறைப்படி விண்ணப்பமும் அனுப்பிவிட்டோம், இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை என்றனர்.
நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்தும் போக்குவரத்திற்கு பாதைகள் திறக்கப்படாமல் உள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்தும், போக்குவரத்து அனுமதிக்கப்படாததற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் பதில் கூற மறுக்கின்றனர். எனவே சுங்கச்சாவடிகளுக்கு மின் இணைப்பு விரைவில் கொடுக்க வேண்டும் என் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்