தண்ணீர்வரத்து இல்லாததால் குறைந்து வரும் பரப்பலாறு அணையின் நீர்மட்டம்
நீர்வரத்து இல்லாததால் பரப்பலாறு அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் சமயங் களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படும். தற்போது பருவமழை முறையாக பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 54 அடி வரை தண்ணீர் உள்ளது. ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம் உள்ளிட்ட 6 குளங்கள் நிரம்பும். மேலும் ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பரப்பலாறு அணை உள்ளது.
அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதால் ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறையும் பட்சத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story