ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் முன்வைப்பு தொகை திரும்ப பெற புதிய நடைமுறை அமல்


ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் முன்வைப்பு தொகை திரும்ப பெற புதிய நடைமுறை அமல்
x
தினத்தந்தி 23 Sep 2018 10:45 PM GMT (Updated: 23 Sep 2018 6:37 PM GMT)

ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் முன்வைப்பு தொகையை திரும்ப பெற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.13 வசூலிக்கப்படுகிறது. கேமரா கட்டணமாக ரூ.25–ம், வீடியோ கேமரா கட்டணமாக ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இங்கு துடுப்பு படகு, மிதி படகு மற்றும் மோட்டார் படகில் சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மிதி படகில் பயணம் செய்ய 2 இருக்கைகளுக்கு ரூ.380, 4 இருக்கைகளுக்கு ரூ.580, மோட்டார் படகில் 8 இருக்கைகளுக்கு ரூ.570, 10 இருக்கைகளுக்கு ரூ.700, 15 இருக்கைகளுக்கு ரூ.ஆயிரத்து 20, துடுப்பு படகில் 4 இருக்கைகளுக்கு ரூ.660, 6 இருக்கைகளுக்கு ரூ.780 கட்டணமாக சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் முன்வைப்பு தொகையுடன் கட்டணம் செலுத்த வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட ½ மணி நேரத்திற்கும் கூடுதலாக படகு சவாரி மேற்கொண்டால் முன் வைப்பு தொகையில் அதற்கான கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ஆனால் ½ மணி நேரத்திற்குள் படகு சவாரியை முடித்து கொண்டால் முன்வைப்பு தொகையை எவ்வித பிடித்தமும் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது படகு சவாரிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்ட நேரம் முதல் சவாரி முடிந்து திரும்பி வரும் வரையிலான நேரம் கணக்கிடப்படுகிறது. மேலும் படகு சவாரி முடிந்ததும் சுற்றுலா பயணிகள் உடனடியாக தங்களது டிக்கெட்டை காட்டி முன்வைப்பு தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இந்த பழைய நடைமுறைக்கு பதிலாக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்ய நவீன கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்யும் முன்பு, ஊழியரிடம் டிக்கெட்டை காண்பித்து ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். படகு சவாரி முடித்து விட்டு திரும்பும் போது டிக்கெட் மீண்டும் ஸ்கேன் செய்யப்படும். அப்போது சுற்றுலா பயணிகள் பயணம் செய்த நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் டிக்கெட் கவுண்ட்டரில் உள்ள கணினியில் பதிவாகிவிடும்.

இதன் மூலம் எத்தனை மணிக்கு படகு சவாரிக்கு செல்கிறார்கள், எப்போது திரும்பி வருகிறார்கள் என்ற விவரம் தெரியும். மேலும் உடனடியாக முன்வைப்பு தொகையை பெற வேண்டிய அவசியம் இல்லை. அலுவலக நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் முன்வைப்பு தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய நடைமுறைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.


Next Story