கோவையில் கடன் தொல்லையால் வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; மகன் பரிதாப சாவு


கோவையில் கடன் தொல்லையால் வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; மகன் பரிதாப சாவு
x
தினத்தந்தி 23 Sep 2018 11:15 PM GMT (Updated: 23 Sep 2018 6:56 PM GMT)

கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் வியாபாரியின் மகன் பரிதாபமாக இறந்தார்.

கோவை,

கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவருடைய மனைவி தேன்மொழி (42). இவர்களுக்கு ஆனந்தகுமார் (25) என்ற மகனும், சவுந்தர்யா (23) என்ற மகளும் உள்ளனர். நாகராஜும், அவரது மகன் ஆனந்தகுமாரும் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

சவுந்தர்யாவுக்கு திருமணமாகி கணவருடன் அருகில் உள்ள காந்தி மாநகரில் வசித்து வருகிறார். ஆனந்தகுமாருக்கும் திருமணமாகி சரோஜினி என்ற மனைவியும், ஒரு கைக்குழந்தையும் உள்ளது. நாகராஜும் அவரது மகனும் ஒரே வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். தந்தையும், மகனும் செய்து வந்த தள்ளுவண்டி பழ வியாபாரத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆனந்தகுமாரின் மனைவி சரோஜினி கைக்குழந்தையுடன் திருப்பூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் சவுந்தர்யா தனது தாய் தேன்மொழிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா தனது பெற்றோர் வீட்டுக்கு நேரடியாக சென்று பார்த்தார். அங்கு பெற்றோரும், அண்ணனும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

இதை பார்த்த சவுந்தர்யா சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களின் உதவியுடன் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஆனந்தகுமார் இறந்து விட்டதாக கூறினார்கள். நாகராஜுக்கும், தேன்மொழிக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவை பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் நாகராஜ் தனது வியாபாரத்துக்காக அதிக கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் தொல்லை காரணமாக அவர்கள் சாணிபவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் 3 பேரும் தற்கொலை செய்வதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். இதனால் தான் ஆனந்தகுமார் மனைவி சரோஜினியை திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற 3 பேரும் கடிதம் எழுதி வைத்து உள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவர்கள் பெரும்பாலானவர்கள் அதிக வட்டிக்கு பணம் வாங்கித்தான் வியாபாரம் செய்வார்கள். எனவே அதுபோன்று அவர்கள் அதிக வட்டிக்கு அதாவது கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலைக்கு முயன்றார்களா? அவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் யாராவது நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 10–ந் தேதி கோவை குனியமுத்தூர் அய்யப்பன் நகரை சேர்ந்த ஜானகிராமன் (44), மனைவி சசிகலா (36), மகள்கள் சினேகா (16), ஹேமாவர்ணா (14) ஆகிய 4 பேர் கடன் தொல்லை காரணமாக பாலில் பூச்சி கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் சசிகலா பரிதாபமாக இறந்தார்.

இதேபோல கடந்த 2–ந் தேதி ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகில் டிராவல்ஸ் அதிபர் வைரமுத்து கடன் தொல்லை காரணமாக தனது பெற்றோரை கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story